2022ம் ஆண்டின் சிறந்த இயக்குநருக்கான அமெரிக்காவின் NYFCC விருதை ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திற்காக இயக்குநர் ராஜமௌலி பெற்றுள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச்சில் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து 500 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவானது. இப்படத்தை DDV Entertainment சார்பில் DDV தனய்யா தயாரித்திருந்தார்.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தில் அவர்களுடன் இணைந்து ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா, அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி ஆகியோர் நடித்திருந்தனர். பாகுபலி படங்களைத் தொடர்ந்து மரகதமணி இசையமைத்திருந்த இப்படத்திற்கு, செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 2020 ஜூலை மாதம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்து. அதைத்தொடர்ந்து கோவிட் மற்றும் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து பலமுறை தள்ளிப்போனது. அதன்பிறகு 2022 மார்ச் 25ம் தேதி இப்படத்தின் வெளியீட்டுத்தேதி இறுதிசெய்யப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.

500 கோடி பட்ஜெட்டில் வெளியான ஆர்.ஆர்.ஆர்., உலகம் முழுவதும் சுமார் 1200 கோடி வசூல் செய்தது. மேலும் உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளையும் வென்றது. இந்நிலையில், இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இதன் இயக்குநர் ராஜமௌலிக்கு 2022ம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநருக்கான விருது அமெரிக்காவின் நியூயார்க் திரைப்பட விழாவில் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்.ஆர்.ஆர். படத்தை அமெரிக்காவில் விநியோகித்த நிறுவங்களில் ஒன்றான Variance Films நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், "இயக்குநர் ராஜமௌலிக்கு 2022ன் சிறந்த இயக்குநருக்கான விருது அமெரிக்காவின் NYFCC(New York Film Critics Circle) சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது ஆர்.ஆர்.ஆர். படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எந்த அளவுக்கு ரசித்துள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து விருது வழங்கும் விழாவில் பேசிய ராஜமௌலி, "NYFCC-யிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்வது எனக்கு மிகப்பெரிய கௌரவம். இந்த விருதை எனக்கு வழங்கியதன் மூலம், நீங்கள் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை மட்டும் கௌரவிக்கவில்லை; மாறாக தென்னிந்தியாவில் உள்ள ஒரு சிறிய திரைப்படத் துறையை, அதாவது தெலுங்கு திரைப்படத் துறையில் நிறைய பேர் கவனிக்கும்படி செய்திருக்கிறீர்கள். இப்படி ஒரு திரை இருப்பது பலருக்குத் தெரியாது, ஆனால் இதன் காரணமாக மக்கள் அதை இனி கவனிப்பார்கள் என்று நான் கருதுகிறேன்" என்று பேசினார்.

இந்நிலையில், விழாவில் குடும்பத்தினருடன் ராஜமௌலி கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.