ஏகப்பட்ட எதிர்பார்புகளும் பல தடைகளையும் தாண்டி இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகியிருக்கிறது சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம்.டைம் லூப் என்ற புதிய கோணத்தில் வெங்கட் பிரபு எனும் ஜாலி கமர்ஷியல் இயக்குனருடன் சிம்பு இணைவதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியது.இவர்களுடன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து கொள்ள படம் வரும் நாள் தான் தீபாவளி என STR ரசிகர்கள் காத்திருந்தனர்.பல போராட்டங்களை கடந்து வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்பதை பற்றி பார்க்கலாம்
நண்பனின் காதலை சேர்த்துவைப்பதற்காக துபாயில் இருந்து கோயம்பத்தூர் வரும் நாயகன் அப்துல் காலிக்காக சிலம்பரசன் , அங்கு நடக்கும் ஒரு மாநாட்டில் முதல்வரை கொன்று அதன் மூலம் மதக்கலவரம் நடக்க திட்டமிட்டிருப்பதை அறிந்து அதனை தடுக்க முயற்சிக்கிறார் அவரால் அவ்வளவு சுலபமாக அதனை தடுக்கமுடியாமல் போக அதே நாளுக்குள் மாட்டிக்கொள்கிறார்.நாயகன் எப்படி இந்த சம்பவத்தை தடுத்து நாள்சுழற்சியில் இருந்து தப்பிக்கிறார் என்பது படத்தின் மீதிக்கதை.
அப்துல் காலிக்காக சிலம்பரசன் தனது துறுதுறு நடிப்பாலும்,வேகத்தாலும் நம்மை அசர வைக்கிறார்,உண்மையிலேயே சிம்பு திரும்ப வந்துட்டாருப்பா என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களுக்கு செம விருந்தாக இந்த படம் அமைந்திருக்கிறது.ஒரு பக்கம் சிம்பு பட்டையை கிளப்புகிறார் என்றால் மறுபக்கம் படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் படி அமைந்திருக்கும் மற்றொரு கதாபாத்திரம் எஸ் ஜே சூர்யா,தனுஷ்கோடியாக தூள் கிளப்பி இருக்கிறார்.சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து வரும் காட்சிகள் தியேட்டரில் விசில் பறக்கும்.
கதையின் நாயகியாக வரும் கல்யாணி ப்ரியதர்ஷன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.எஸ் ஏ சந்திரசேகர்,ஒய் ஜி மகேந்திரன்,வாகை சந்திரசேகர் என சீனியர் நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பினை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கின்றனர்.பிரேம்ஜி,கருணாகரன்,அஞ்சனா கீர்த்தி,மனோஜ் பாரதிராஜா போன்றோர் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.
டைம்லூப் என்ற புதிய வித்தியாசமான கதைக்களத்தை கமர்ஷியலாக கொண்டுவந்து நமக்கு கொடுத்ததற்கு வெங்கட் பிரபுவிற்கு வாழ்த்துக்கள்.தமிழிலும் இப்படி ஒரு படம் எடுக்கமுடியும் என்று காட்டியதற்கு பெரிய அப்லாஸ்.சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் நம்மை திசை திருப்புகிறார் வெங்கட் பிரபு.அவருக்கு பக்கபலமாக இருந்து படத்தினை மற்றுமொரு லெவெலுக்கு எடுத்து செலுத்து யுவன் ஷங்கர் ராஜாவின் இசை.படத்தில் பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் யுவன்.
படத்தில் ஒரே ஒரு பாடல் தான் என்றாலும் திரைக்கதைக்கு பக்கபலமாக தனது முத்திரையை பதித்திருக்கிறார் எடிட்டர் பிரவீன் கே எல்.படத்தில் பெரிய வேலைப்பளு இவருக்கு தான் என்றாலும் தனது எடிட்டிங் மூலம் திரையில் மாயாஜாலம் செய்கிறார் ,இருந்தாலும் படத்தினை ஆங்காங்கே ஸ்லோவாக்கும் சில காட்சிகளை குறைத்து படத்தினை மேலும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கலாம்.படத்தின் ஒளிப்பதிவாளர் தனக்கான பணியை சிறப்பாக செய்துள்ளார்.
பல சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த மாநாடு அனைவரையும் நிச்சயம் என்டெர்டைன் செய்யும்
Verdict
திரையரங்குகளில் மீண்டும் ஒரு தீபாவளியை தந்துள்ளது சிலம்பரசனின் மாநாடு