இதுவரை வேறு எந்த தொற்று நோய்க்கும் இல்லாத அளவாக, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவற்றில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ உள்ளிட்ட 6 தடுப்பூசிகள் மட்டும் பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் ரஷ்யாவில் அந்த நாட்டின் ராணுவ அமைச்சகமும், கேமாலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.
இந்த தடுப்பூசி பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி நேற்று பதிவு செய்யப்பட்டுவிட்டது.
இந்தத் தகவலை வெளியிட்ட ரஷ்ய அதிபர் புதின், கொரோனா தடுப்பூசிக்கு ’ஸ்புட்னிக் -வி’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது மிகவும் திறம்பட செயல்படுகிறது . இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்றும் கூறியிருந்தார். மேலும் ``இந்த தடுப்பூசியானது, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இந்த தடுப்பூசி ஆற்றல் மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது” என்று கூறியிருந்தார் அவர்.
ஆனால் உலக சுகாதார நிறுவனம் வகுத்த நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்த தடுப்பூசி ஆய்வு செய்யப்படவில்லை. குறிப்பாக, கால அளவுகோலில் நிறைய வித்தியசாம் இருக்கிறது. ரஷ்ய தடுப்பூசி, மிகக்குறைவான நாள்களே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிலும், மூன்றாம் கட்ட பரிசோதனை, செய்யப்படவே இல்லை. ஆனாலும்கூட, உள்நாட்டு அரசால், இந்த மருந்து நேற்றைய தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தினர், ``இந்த தடுப்பூசிக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, மிகக் கடுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்" என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ ரஷ்யாவின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் முன், அதற்கு தகுதி அளிப்பது குறித்த நடைமுறைகள் பற்றிய ஆலோசனையை மேற்கொண்டோம். இங்கே, பயன்பாட்டுக்கு முன் தகுதி அளிப்பது என்பது, தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வுக்கு செய்த பின்னரே இருக்கும்” என்றார்.
இதனிடையே ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தங்களது தடுப்பூசியை பெற இந்தியா உட்பட 20 நாடுகள் ஆர்வமாக இருக்கின்றன; 100 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளுக்கு ஆர்டர் தர ஒப்பந்தம் செய்துள்ளன என தெரிவித்துள்ளது.
இருப்பினும், ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், மாநில அரசுகள், தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தேசிய நிபுணர் குழு தொடர்பில் இருக்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். பீகார், குஜராத், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.