பிரபல நிறுவனத்தின் காரை சர்வீஸ் செய்ய 17 லட்சம் ரூபாய் கேட்டதால் ஆத்திரமடைந்த காரின் உரிமையாளர் அந்த காரை வெடிவைத்து தகர்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா நிறுவனம் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் உள்ளது அனைவரும் அறிந்ததே. இதன் நிறுவனரான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார்.
டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் உலககெங்கும் புகழ்பெற்றவை. அதுமட்டுமின்றி எலான் மஸ்க், ஸ்பைஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் கார் ஒன்றை அதன் உரிமையாளர் வெடிவைத்து தகர்க்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெற்கு பின்லாந்தின் கிம்மென்லாக்சோ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பின்லாந்து நாட்டைச் சேர்ந்த டூமாஸ் காட்டைனேன் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
டூமாஸ் காட்டைனேன் வசித்து வரும் தெற்கு பின்லாந்தின் கைமன்லாக்ஸோ அடுத்த ஜாலா கிராமம், குறைவான வீடுகள், மரங்கள், மக்கள் தொகை பனிப்பிரதேசம் சூழ்ந்த இடமாகும். மிகச்சிறிய கிராமத்தில் வசிப்பதால் கார் அதிக அளவு தூரம் செல்ல வாய்ப்பில்லை.
இதனால் கடந்த 2013 முதல் தற்போது வரை அந்த கார் அதிகபட்சம் 1,500 கிலோ மீட்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கிலோ மீட்டர் மட்டுமே ஓட்டியநிலையில் அதில் பழுது ஏற்பட்டதால் பழுது பார்க்கும் நிறுவனத்தை டூமாஸ் காட்டைனேன் அணுகியுள்ளார்.
தனக்கு சொந்தமான டெஸ்லா காரை கடந்த சில தினங்களுக்கு முன் பழுது பார்ப்பதற்காக ஒரு நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளார். அவர் காரை ஒப்படைத்த சில தினங்களில் அந்த நிறுவனத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது.
அங்கு சென்று பார்த்த போது டூமாஸ் காட்டைனேன் காரை பழுது பார்ப்பதற்கு ரூ .17,00,000 லட்சம் (இந்திய மதிப்பில் ) செலவாகும் என பழுது பார்க்கும் நிறுவ்னம் தெரிவித்துள்ளது. 1,500 கிலோ மீட்டர் பயணத்தை கூட தாண்டாத நிலையில் அதை பழுதுப் பார்க்க இவ்வளவு பணமா என்று உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் டூமாஸ் காட்டைனேன் தனது காரை 17 லட்சம் கொடுத்து சரிபார்ப்பதற்கு பதிலாக 30 கிலோ டைனமைட்டைப் பயன்படுத்தி வெடிக்க வைத்துள்ளார். அவர் அந்த காரை வெடிக்க செய்வதற்கு முன் பொம்மிஜட்காட் என்ற யூ-டியூப் சேனலின் உதவி மூலம் அந்த நிகழ்வை படம்பிடித்துள்ளார்.
அதில் அவர் அந்தக் காரை மக்கள் கூட்டம் இல்லாத இடத்தில் வெடிக்க வைக்க தயாராகுகிறார். பின்னர் அவர் அந்த காருக்கு வெடிமருந்துகளை வைப்பதும் அதன் பிறகு அந்த கார் வெடித்து சிதறுவதும் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வீடியோவை அந்த யூ-டியூப் சேனல் பல்வேறு கோணங்களில் இருந்து படம் பிடித்துள்ளனர்.
இது குறித்து அதன் உரிமையாளர் டூமாஸ் காட்டைனேன் கூறியதாவது :
“நான் டெஸ்லாவை வாங்கியபோது, முதல் 1,500 கிமீ அது நன்றாக ஓடியது. பின்னர் அது சரியாக இயங்கவில்லை. எனவே எனது காரை பழுதுபார்க்கும் நிறுவனத்தில் ஒப்படைத்தேன். ஏறக்குறைய ஒரு மாதமாக கார் அங்கேயே இருந்தது. கடைசியாக எனது காருக்கு அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று எனக்கு அழைப்பு வந்தது.
முழு பேட்டரி செல்லையும் மாற்றுவதே ஒரே வழி என்றும், அதற்கு ரூ .17,00,000 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்தனர். இதனால் நான் எனது காரை எடுத்துக்கொள்கிறேன் என அவர்களிடம் சொன்னேன். அதன் பிறகு இதை சரிசெய்யும் முடிவை விடுத்து எனது காரை வெடிக்கவைக்க முடிவு செய்தேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காரை அவர் வெடிக்கவைத்த வீடியோ இணையத்தில் பதிவு செய்யப்பட்ட , சில மணிநேரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு மலையிலோ, கிணற்றிலோ பாறைகளை தகர்க்க என்னென்ன முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ அத்தனை விதிகளும் பின்பற்றப்பட்டது. கார் வெடித்தவுடன் பாறைகளும், பனிகளும், காரின் உதிரிபாகங்களும் வானாளவிய உயரத்திற்கு சென்று கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.