ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் மத்திய அரசு பதிலடி அளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து மேலும் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர். ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவி துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவி துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து, கர்நாடகத்தில் 3 தினங்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவிட மறுத்த ஐகோர்ட்டு, வழக்கு விசாரணையை தலைமை நீதிபதிக்கு மாற்றி அறிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் சர்ச்சைக்கு பதிலளித்து, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அலுவலகம் ஐஆர்எஃப் கர்நாடக ஹிஜாப் தடை மத சுதந்திரத்தை மீறுவதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளை களங்கப்படுத்துகிறது மற்றும் ஒதுக்கி வைப்பதாகவும் இருக்கிறது என்று நேற்று தெரிவித்துள்ளது.
ஐஆர்எஃப்-ன் அமெரிக்க தூதர் ரஷாத் ஹுசைன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: மத சுதந்திரம் என்பது ஒருவருடைய மதரீதியான ஆடைகளை தேர்ந்தெடுக்க்கொள்ளும் உரிமைகளை சேர்த்ததே. மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியலாமா, அணியக்கூடாதா என்பதை கர்நாடக அரசு முடிவு செய்யக்கூடாது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது பெண்களின் மத சுதந்திரத்தை களங்கப்படுத்துவது போன்றது என பதிவிட்டுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி, எஸ். ஜெய்சங்கர், மெல்போர்னில் நடந்த நான்காவது குவாட் அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து இந்தநிலையில், கர்நாடாகாவின் சில கல்வி நிறுவனங்களில் நிலவி வரும் சீருடை சம்பந்தமான பிரச்சினை உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துகள் எப்போதும் ஏற்கப்படாது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் மத்திய அரசு பதிலடி அளித்துள்ளது.