“ஒரு சர்வாதிகாரி தங்களின் போருக்கான விலையை கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர் மேலும் போர்களை புரிவார்” என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “நாங்கள் தயார்” என்று, ரஷ்யாவிற்கு எதிராக அதிரடியாக பேசி உள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் புதிய உச்சம் பெற்றிருக்கும் நிலையில், இன்றைய தினம் 7 வது நாளாக தொடர்ந்து வருகிறது.

உலக அளவில் 2 ஆம் இடத்தில் உள்ள ரஷ்யாவிற்கும், 22 வது இடத்தில் உள்ள உக்ரைனுக்கும் தான் இந்த போர் தற்போது நடந்துக்கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனே மிக அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், உக்ரைனக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளும் தங்களது போர் தளவாடங்களை கொடுத்து, உக்ரைனுக்கு ஆதரவாக நிற்பதால், ரஷ்யாவும் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

மேலும், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

குறிப்பாக, நேற்றைய தினமே உக்ரைன் தலைநகர் கீவ் நகரையும் சுற்றி வளைத்துள்ள ரஷ்ய படைகள், அந்நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இப்படியாக, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் இந்த சூழலில் தான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி செய்து வருகின்றன. ஆனால், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை நேரடியாக ரஷியாவை எதிர்த்து, இது வரை சண்டையிடவில்லை. இது தொடர்பாக இணையத்தில் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த சூழலில் தான், அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முன்னதாக உரையாற்றினார். அப்போது பேசிய ஜோ பைடன்,“உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு கடும் கண்டனம்” தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காத போது, அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ள முடியும்” என்றும், குறிப்பிட்டார்.

அத்துடன், “அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுகின்றனர் என்றும், புதினின் இந்த போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது என்றும், இது ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புதின் நிராகரித்து விட்டார்” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், “மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்து விட்டார்” என்றும், சுட்டிக்காட்டிய ஜோ பைடன், “புதின், நம்மை நமது வீட்டிலேயே பிரிந்து விடலாம் என்று நினைத்து விட்டார் போல” என்றும், சூசகமாக பேசினார்.

குறிப்பாக, “புதின் தவறாக நினைத்து விட்டார். நாங்கள் தயார்” என்றும், ஜோ பைடன், சூளுரைத்தார்.

அதாவது, “நாங்கள் தயார்” என்று, ஜோ பைடன் கூறுவது பொருளாதார ரீதியில் ரஷியா மீது மேலும் தடைகளை விதிப்பதா? அல்லது ரஷியா மீது நேட்டோ ராணுவ நடவடிக்கை எடுக்க இருப்பதா” என்பது பற்றி, ஜோ பைடன் முழுமையாக விளக்கவில்லை. இதனால், ரஷ்ய விவகாரத்தில், அமெரிக்க அடுத்து எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்து, உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இதனால், ரஷ்ய மீதான அமெரிக்காவின் அடுத்தக்கட்ட தாக்குதல் விரைவில் இருக்கலாம் என்றும், தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

முக்கியமாக, ரஷ்யா உலக அளவில் பல்வேறு விதமான தடைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த பேச்சு, முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.