“உணவு தட்டுப்பாடுக்கு உலகில் எந்த நாடும் தப்ப முடியாது” என்று, ஐ.நா சபை கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்தியாவை சுற்றி உள்ள சில நாடுகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உணவு பஞ்சம் ஏற்பட்டு, தற்சமயம் சற்றே ஜகஜமான நிலைக்கு திரும்பி இருக்கிறது என்றே கூறப்படுகிறது.
அதாவது, இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அங்கு ஆட்சி கவிழ்க்கப்பட்டு, புதிய ஆட்சிக்கு அமைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான இலங்கையில் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அந்நாட்டு மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கை தற்போது தத்தளித்துக்கொண்டு தான் இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் கடந்த மாதம் கூட, “பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களுக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் வரையிலான கோதுமை ஒதுக்கீட்டை உணவு அமைச்சகம், கடந்த மாதம் திருத்தி இருந்தது.
அதாவது, திருத்தப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் அடுத்த 5 மாதங்களுக்கு தமிழ்நாடு, கேரளா, பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து கோதுமை கிடைக்காது.
எனினும், “இந்த மாநிலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க, குறிப்பிட்ட இந்த 4 மாநிலங்களுக்கும், மத்திய தொகுப்பில் இருந்து அரிசி மட்டும் விநியோகிக்கப்படும்” என்றும், மத்திய அரசு கூறியுள்ளது.
முக்கியமாக, டெல்லி, குஜராத், மராட்டியம், மேற்கு வங்கம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு கணிசமான அளவு கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டு அரிசி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 80 கோடி பயனாளிகளுக்கு மாதம் தோறும் 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தில் தான், தற்போது “தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு செப்டம்பர் மாதம் வரை கோதுமை கிடையாது” என்று, மத்திய அரசு தற்போது கைவிரித்து உள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு கோதுமை ஒதுக்கீடு செய்யப்படாது என்ற காரணத்தால், குறிப்பிட்ட இந்த 4 மாநிலத்திலும் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவை ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்திய நிலையில், இன்னொரு புறம் உலகமே பொருளாதாரச் சரிவில் சிக்கி, உணவுப்பொருட்களும் கூட, வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வை சந்தித்து வருகின்றன.
அந்த வரிசையில், வட கொரியா உட்பட பல நாடுகள் உணவுத் தட்டுப்பாட்டால் பெரும் அவதிப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தான், “உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்” என்று, ஐநா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து ஐநா விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், “உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் மிக விரைவில் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும், அப்போது இந்த உணவு பஞ்சத்தின் விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது” என்றும், கடுமையாகவே ஐநா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
“பருவநிலை மாற்றம், கொரோனா காரணமாகவும், சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது என்றும், இவைகளால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள்” கூறுவதாகவும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
முக்கியமாக, “உக்ரைன் - ரஷ்ய போரால், இந்த உணவு நிலமை, இன்னும் மிகவும் மோசமடைந்து உள்ளது என்றும், அதே போல் சில தினங்களில் உணவுத் தட்டுப்பாட்டால் மேலும் பல நாடுகள் இன்னும் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும், இந்த உணவு பஞ்சம் இன்னும் சில ஆண்டுகளில் அதிகரிக்கக் கூடும்” என்றும், ஐ.நா. கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
குறிப்பாக, உலகில் உணவு பொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க ஐ.நா அமைப்பின் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், உலகம் முழுவதும் விவசாய உற்பத்தியை பெருக்கவும், அவர்களின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தவும் தேவையான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகவும்” ஐ.நா. கூறி உள்ளது.