24 வது நாளாக தொடரும் ரஷ்யா - உக்ரைன் போரில், கிட்டதட்ட 14,200 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் இன்றுடன் 24 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யா, தனது பலத்தை ஒட்டுமொத்தமாக திரட்டி, தொடர்ச்சியாக உக்ரைனை மிக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

ரஷ்ய படைகளின் தாக்குதல்களில் உக்ரைன் நகரங்களின் பல இடங்களிலும் தீப்பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளும் ரஷ்யா வசம் சென்று உள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளன.

இதனால், உக்ரைன் - ரஷ்யா இடையேயான இந்த போரை நிறுத்துவதற்காக, பல்வேறு நாடுகள் முயற்சித்த போதிலும், அது முற்றிலுமாக தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. இந்த சூழலில் தான், “எங்கள் நாட்டில் ரஷ்யா, இனப்படுகொலை புரிந்து வருவதாக” உக்ரைன் மிக கடுமையாக குற்றஞ்சாட்டி இருந்தது.

அத்துடன், “இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு உத்தரவிடக்கோரி, சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் முறையிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடத்திய நிலையில், “உக்ரைன் மீது நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று, ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

ஆனால், “உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது” என்று, ரஷ்யா தற்போது அதிரடியாக கூறியது. அத்துடன், உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

மேலும், ரஷ்யாவை உக்ரைன் படைகள் மிக கடுமையாக எதிர்த்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையேயான மிக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. என்றாலும், உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் 60 அப்பாவி பொது மக்கள் உள்பட 222 முன்னதாக உயிரிழந்துள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவர்களுடன், 241 பொது மக்கள் உள்பட 889 பேர் ரஷிய தாக்குதலில் காயம் அடைந்து இருப்பதாகவும், கீவ் நகரத்தின் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, “உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியது முதல் கிட்டதட்ட 14,200 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக” உக்ரைனின் ஆயுத பிரிவுப் படைகள் தகவல் தெரிவித்து உள்ளன.

மேலும், “93 ரஷ்ய விமானங்கள் மற்றும் 112 ஹெலிகாப்டர்களுடன் 450 ரஷ்ய டாங்கிகளும் அழிக்கப்பட்டு உள்ளன.

அத்துடன், “கிட்டத்தட்ட 1,450 மற்ற கவச போர் வாகனங்கள் அழிக்கப்பட்டுஉள்ளதாகவும்” உக்ரைன் கூறி உள்ளது.

“72 ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் மற்றும் 43 விமான எதிர்ப்பு ஆயுத அமைப்புகளுடன் 205 ரஷிய பீரங்கி அமைப்புகள் அழிக்கப்பட்டு உள்ளன” என்றும், உக்ரைன் கூறி உள்ள நிலையில், இதனை உறுதி செய்யவில்லை என்றாலும், ரஷ்யாவும் இதற்கு இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

முக்கியமாக, அமெரிக்க மற்றும் நேட்டோ படை அதிகாரிகளின் தகவல்களின் படி, “ரஷியாவின் உயிரிழப்புகள் 3 ஆயிரம் முதல் 10 வரையில் மட்டுமே இருக்கும்” என்று, அமெரிக்காவின் மதிப்பீடுகள் கூறுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.