ஒமைக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தாலும் அது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று பைடன் தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் கொரோனா குறித்து ஆய்வு செய்யும் குழுவினருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார். அதில் ஒமைக்ரான் வகை வைரசால் ஏற்படும் பாதிப்பு குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கூட்டத்துக்கு முன் அவர் பேசுகையில் ஒமைக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தாலும் அது குறித்து கவலைப்பட வேண்டாம். தடுப்பூசிகள் பூஸ்டர் டோஸ்கள் பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு ஆபத்தை குறைத்துள்ளன என்றும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கொரோனா தொற்று ஏற்படலாம். ஆனால் பெரிய அளவில் உடல் பாதிப்பு ஏற்படுத்தாது. தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டுவோருக்கு எந்த கருணையும் காட்ட தேவையில்லை. அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். இப்போது பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா அலையானது தடுப்பூசி செலுத்தி கொள்ளாதோரை தான் அதிகம் தாக்கும். அமெரிக்காவில் 12-15 வயதுக்குட்பட்டோர் உள்பட அனைத்து மக்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என பைடன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இம்முறை அமெரிக்கர்கள் அதிகம் பேர் வேலையில் உள்ளனர். குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். உயிரிழப்பு மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது என்று வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அச்சப்படாமல் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க ஜனாதிபதி பைடன் வலியுறுத்தி பேசினார்.