மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் காரை ஆட்டோ பைலட் முறைக்கு மாற்றி கணவர் பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா நிறுவனம் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் உள்ளது. இதன் நிறுவனரான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார். டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் உலககெங்கும் புகழ்பெற்றவை.
பல லட்சம் மற்றும் கோடிகள் மதிப்புள்ள டெஸ்லா நிறுவனத்தின் கார்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதில் ஆட்டோ பைலட் (தன்னியக்க பைலட்) முறையானது டெஸ்லா கார்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
இதனால் டெஸ்லா கார்கள் ஓட்டுநர்கள் இயக்காமல் தானாகவே இயங்கும் என்றாலும், ஓட்டுநர் இருக்கையில் யாராவது அமர்ந்திருக்கும் போது மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்துமாறு டெஸ்லா நிறுவனம் பரிந்துரைக்கிறது.
டெஸ்லா நிறுவனத்தின் இந்த அம்சம் ஏற்கனவே பல ஓட்டுநர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது டெஸ்லா நிறுவனத்தின் கார், ஒரு பெண் தனது குழந்தையைப் பெற்றெடுக்க உதவியுள்ளது.
பென்சில்வேனியா மாநிலம் ஃபிலடெல்பியா நகரத்தைச் சேர்ந்த தம்பதி கீட்டிங் ஷெர்ரி (34) - யிரான் ஷெர்ரி (33). இவர்களுக்கு 3 வயதில் ரபா என்ற மகன் உள்ளான். யிரான் ஷெர்ரி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர் இந்த தம்பதிகள்.
அப்போது சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் இந்த தம்பதி சிக்கியுள்ளனர். அந்தச் சமயம் பார்த்து யிரானுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனே கணவர் கீட்டிங் ஷெர்ரி காரில் மருத்துமனை நோக்கி செல்ல முயற்சித்தும் போக்குவரத்து நெரிசலால் முடியவில்லை.
மனைவி யிரான் ஷெர்ரியின் பிரசவ வலி அதிகரிக்க, சாலை நெரிசலோ சரியாகவில்லை. இதனால் மருத்துவமனைக்குச் சரியான நேரத்தில் செல்ல முடியாது என்பதை உணர்ந்தார் கீட்டிங் ஷெர்ரி.
இதையடுத்து கணவர் கீட்டிங் ஷெர்ரி காரை ஆட்டோ பைலட் முறைக்கு மாற்றி தனது மனைவியின் பிரசவத்திற்கு உதவியுள்ளார். மருத்துவமனை செல்ல சுமார் 20 நிமிடம் ஆகியுள்ளது.
மருத்துவமனையின் வாயிலில் கார் நுழைந்தவுடனே குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. உடனே அங்கு வந்த செவிலியர்கள் காரில் வைத்தே குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்தனர்.
டெஸ்லா காரில் பிறந்த மேவ் என்ற குழந்தையை, மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள் `டெஸ்லா பேபி’ என்றழைக்கத் தொடங்க இந்த விவகாரம் பலரையும் சென்றடைந்து வைரலாகியுள்ளது.
டெஸ்லா காரில் பிறந்ததால் தங்கள் குழந்தைக்கு `டெஸ்’என்று பெயர் சூட்டலாம் என ஷெர்ரி தம்பதியினர் ஆலோசித்ததாகக் கூறியுள்ளனர்.
இந்தக் குழந்தை தான் உலகின் முதல் டெஸ்லா குழந்தை என அழைக்கப்படுகிறது. குழந்தைக்கு டெஸ் என பெயர் வைக்க பெற்றோர் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய யிரான் ஷெர்ரி, மருத்துவமனைக்குச் செல்வதற்குச் செலவிடப்பட்ட 20 நிமிடப் பயணம் மிகவும் வலி நிறைந்ததாக இருந்ததாகவும், அவர் தொடர்ந்து காரில் பொருத்தப்பட்டிருந்த திரையில் காட்டப்படும் பயண நேரத்தையே கண்காணித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கீட்டிங் ஷெர்ரி கூறும்போது ,"டெஸ்லா காரின் தன்னியக்க பைலட்டின் அற்புதமான வடிவமைப்பிற்கு டெஸ்லா நிறுவன பொறியாளர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம் " என தெரிவித்துள்ளார்.
டெஸ்லா காரை பழுது பார்க்க 17 லட்சம் ரூபாய் செலவாகும் என்று பழுது பார்க்கும் நிறுவனம் கூறியதால், ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள டெஸ்லா காரை பின்லாந்தில் ஒருவர் வெடி வைத்து தகர்த்த நிலையில், அமெரிக்காவில் டெஸ்லா கார் உதவியால் பெண் ஒருவர் குழந்தை பெற்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளது.