சர்வதேச பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு அமெரிக்காவால் 5 மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த சிராஜுதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் புதிய உள்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளது உலக நாடுகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றி உள்ள நிலையில், அந்த நாட்டில் இருந்து கடந்த 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறி உள்ளன.

இந்த நிலையில் தான், அமெரிக்க படை ஆப்கானிஸ்தானை விட்டு விலகி உள்ள நிலையில், அவர்கள் அங்கு விட்டுச் சென்ற ஹெலிகாப்டர்கள், விமானங்களை தலிபான்கள் கைப்பற்றி அவற்றையும் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

அத்துடன், ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் வசப்படுத்தியுள்ள தலீபான்கள், அங்கு புதிய அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

தாலிபான்களின் அமைச்சரவையில் தாலிபான்கள் அல்லாத வேறு யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, முல்லா அப்துல்லா முகமது ஹசன் அகுந்த் இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். முல்லா அப்துல் கனி பரதர் மற்றும் முல்லா அப்துல் ஸலாம் ஆகியோர் துணை பிரதமர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் மீது ஐ.நா.வில் பொருளாதார தடைகள் ஏற்கனவே விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சிராஜுதீன் ஹக்கானி ஆப்கனின் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பது சர்வதேச அளவில் புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

அதற்குக் காரணம், இவரது தலைக்கு அமெரிக்காவால் 73 கோடி ரூபாய் விலை வைக்கப்பட்டதே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இவர், அமெரிக்காவால் பயங்கரவாத குழுவாக அறிவிக்கப்பட்டுள்ள ஹாக்கானி அமைப்பைச் சேர்ந்தவர் ஆவர்.

முக்கியமாக, அல்கொய்தாவுடன் இணைந்து பல தற்கொலைப்படை தாக்குதலையும் இந்த அமைப்பு நடத்தி உள்ளதாக, அமெரிக்க குற்றம்சாட்டி உள்ளது.

அதே போல், தாலிபான் நிறுவனர் முல்லா முகமது ஓமரின் மகன் முல்லா முகமது யகூப், பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அமிர்கான் முட்டாகி வெளியுறவு அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்ட ஜபிஹுல்லா முஜாஹித், தகவல் தொடர்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இவர், தான் தாலிபான்கள் நடத்தும் தற்கொலைப் படை தாக்குதலுக்குப் பொறுப்பேற்று டிவிட்டரில் தகவல்களை வெளியிட்டு வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவலை தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், காபூலில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது உறுதிப்படுத்தினார்.

அப்போது பேசிய அவர், “ஆப்கானிஸ்தானில் அமையும் தலிபான்களின் இடைக்கால அரசில் முல்லா முகம்மது ஹசன் அகண்ட் தலைவராகவும், தலீபான் தலைவர் முல்லா பரதர், துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்று, கூறினார்.

இப்படியாக, சர்வதேச பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு ஐ.நா.வால் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்ட 5 பேர் ஆப்கானிஸ்தானின் அமைச்சரவையில் இடம் பிடித்து உள்ளது, உலக நாடுகள் இடையே கடும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.