இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த ஓமிக்ரான் வைரஸ் உலகெங்கும் பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.
மின்னல் வேகத்தில் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் ஒமிக்ரான் பரவ தொடங்கியுள்ளது. இது மிக வீரியமிக்கது என்றும், பன்மடங்கு பெருகும் சக்தி கொண்டது என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
டெல்டா வைரஸ் போலவே தாக்கத்தை தந்துவிடுமோ என்ற கலக்கமும் உலக மக்களை சூழ்ந்து வருகிறது. அதனால், பல்வேறு நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்றைய தினம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. கர்நாடகாவில் 2 பேருக்கு இந்த புதிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 பேருமே லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும் அறிகுறிகளும் கூட தீவிரமாக இல்லை என்றும் மத்திய அரசு கூறியிருந்தாலும், இது கவலையை ஏற்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் கண்டறியப்பட்ட 2 பேரில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்றும் இன்னொருவர் பெங்களூரை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்கள் அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தியாவை போலவே பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
இதனால் உலகம் முழுவதுமுள்ள அரசுகள், தொற்று பாதித்த நாடுகளுடனான விமான சேவையை உடனடியாக ரத்து செய்துள்ளன. இதைதவிர தற்போது மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் மொத்தம் 29 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி 373 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இதன் வேகம் அதிகரித்துள்ளதாக கணக்கிடப்படுகிறது.
இவற்றில் தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் முதலில் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லிஸ்ட்டில் தற்போது கானா, நைஜீரியா, நார்வே, சவுதி அரேபியா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவல் ஏற்பட்டு உள்ளது.
ஆக மொத்தம் உலகம் முழுவதும் 29 நாடுகளில் பரவிய ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்ற நாடுகளுக்கும் அச்சத்தை தந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய நபர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
இதையடுத்து மரபணு பரிசோதனை நடத்தப்பட்டதில் ஒமிக்ரான் வகை கொரோனா என உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட ஒமிக்ரான் கொரோனா வைரஸ், இலங்கைக்கு பரவுவதைத் தடுக்க முடியும் என்பது நம்பமுடியாதது என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்திருந்தது.
ஏனெனில் இந்த ரகம் வேகமாகப் பரவி வருவதாக ஏற்கனவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நோய் பரவுவதை முடிந்தவரை தாமதப்படுத்துவதே சிறந்த நடவடிக்கை என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்னே (Dr. Padma Gunaratne) தெரிவித்திருந்தார்.
ஒமிக்ரான் வைரஸ் பரவுவதைத் தாமதப்படுத்துவதன் மூலம் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் பயனுள்ள தடுப்பூசி திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில்தான் இலங்கையில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.