கிரிக்கெட் போட்டி விவாதத்தின் போது, நேரடி டி.வி.யில் நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் அவமானப்படுத்தபட்டு பாதியிலேயே வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

T20 இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய தினம் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி நடைபெறும் போது, அந்நாட்டில் தனியார் டி.வி.யில் நேரடி விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருந்தது. அதுவும், அந்த டி.வியானது பாகிஸ்தான் தேசிய ஊடகமான பி.டி.வி.யில் நேரடியாக லைவ் ஓடிக்கொண்டு இருந்தது.

அப்போது, கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்த பிறகு நடந்த அந்த டி.வி. நிகழ்ச்சியில், கிரிக்கெட் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பேசி வந்தனர்.

அதில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சோயிப் அக்தர், உமர் குல், ரஷித் லத்திப், ஆகுப் ஜாவித், ஜாம்பவான்களான சர் விவியன் ரிச்சர்ட்ஸ், டேவிட் கோவர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சனா மிர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாடினார்கள்.

இந்த நிகழ்ச்சியை, நவுமன் நியாஸ் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நவுமன் நியாஸுக்கும், சோயிப் அக்தருக்கும் இடையே ஒரு கேள்வி தொடர்பாக சர்ச்சை வெடித்தது.

அதாவது, நெறியாளர் நவுமன், நியூசிலாந்து உடனான போட்டி குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார், அப்போது, அந்த கேள்விக்கு பதிலாக அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பந்து வீசிய ஹரிஸ் ரவுப்பை புகழ்ந்து சோயிப் அக்தர் பேசினார்.

இப்படி, பாகிஸ்தான் பவுலரை பற்றி சோயிப் அக்தர் பேசிக் கொண்டிருந்தபோது, நெறியாளர் நவுமன் பாதியில் குறுக்கிட்டு, சோயிப்பை பார்த்து “நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள். இதைக் கூற நான் விரும்பவில்லை, இருந்தாலும் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறலாம். இதனை நான் லைவ்ல் கூறுகிறேன்” என்று கூறியுள்ளார்.

அதுவரை சற்று சிரித்துக்கொண்டிருந்த சோயிப் அக்தரின் முகம் அப்படியே சுருங்கிப் போனது,

முக்கியமாக, நிகழ்ச்சி தொகுப்பாளர் சோயிப்பை அக்தரை பார்த்து, இப்படி கூறியது சோயிப் மற்றும் அங்கிருந்த சக பிரபலங்களும் அப்படியே அதிர்ச்சியில் திகைத்தனர். அப்போது, அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த முடியாமல், அந்த நிகழ்ச்சிக்கு இடைவேளை விடுவதாக அந்த தொகுப்பாளர் கூறினார்.

பின்னர், இடைவேளைக்கு பிறகும் இந்த விவகாரம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சோயிப் அக்தர், தனது மைக்கை கழற்றிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

மேலும், அவர் வெளியேறும் முன்பாக அங்கிருந்த சக பிரபலங்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, “நான் டி.வி. லைவ் ஷோவில், இந்த தேசத்திற்கு முன்னால் அவமானப்படுத்தப்பட்டு விட்டேன் என்றும், பிடிவி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்வதாகவும்” அக்தர் கூறிச் சென்றார்.

இந்த சர்ச்சைக்குறிய காட்சிகள் யாவும் சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

குறிப்பாக, சோயிப் அக்தரை நெறியாளர் நடத்திய விதம் மிகவும் மோசமானது என்றும். இதற்காக சோயிப்பிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இணையவாசிகள் பலரும் கொந்தளித்து எழுந்துள்ள நிலையில், பல ரசிகர்களும் சோயிப்புக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, சோயிப் அக்தர் இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட் உள்ளார்.

அந்த வீடியோவில், “சர் விவியன் ரிச்சர்ட்ஸ், டேவிட் கோவர் போன்ற ஜாம்பவான்கள் என் சமகாலத்தவர்கள், மூத்தவர்கள் மற்றும் லட்ச கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் இது நடந்திருப்பது மிகவும் சங்கடமாக உள்ளது” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

என்னை அரங்கில் இருந்து வெளியேறச் சொல்லி தொகுப்பாளர் அவமதித்த போது, உங்கள் பேச்சுக்காக மன்னிப்பு தெரிவித்தால் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்தேன் என்றும், இருப்பினும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்பதால், எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்றும், அக்தர் தனது தரப்பு நியாத்தை அந்த வீடியோவில் சோயிப் பேசி உள்ளார்.