ஒருமுறை வந்தால் மனிதர்களில் இந்த வகை ஒட்டுண்ணியானது கண்களின் பின்னால் தழும்பு ஏற்படுத்த கூடியது என கண்டறியபட்டுள்ளது.

உலகில் அதிக அளவில் பரவியுள்ள ஒட்டுண்ணி வகையாக டாக்சோபிளாஸ்மா கோண்டி உள்ளது. உலகத்தில் அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ள இந்த வகை ஒட்டுண்ணிகள் எல்லா பாலூட்டிகளிலும், பறவைகள் மற்றும் மனிதர்களிலும் தொற்றும் தன்மை கொண்டது. ஒரு முறை ஒரு நபருக்கு தொற்று ஏற்பட்டு விட்டால், பின்னர் வாழ்நாள் முழுவதும் டாக்சோபிளாஸ்மா ஒட்டுண்ணியை அந்த நபர் சுமந்திடுவார்.

அதாவது நம்முடைய உடலில் இருந்து இந்த ஒட்டுண்ணியை அழிப்பதற்கான மருந்து இதுவரை நம்மிடம் இல்லை. மனிதர்களில் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் பெறப்பட்ட தடுப்பூசி என எதுவும் இல்லை. உலகம் முழுவதும் இந்த ஒட்டுண்ணியானது 30–50 சதவீத மக்களிடம் தொற்றியுள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வகை ஒட்டுண்ணியால் ஏற்பட கூடிய வியாதி மனிதர்களின் கண்களின் பின்புறம் தழும்பு ஏற்படுத்த கூடியது. இந்த வியாதியின் அடையாளங்கள் பற்றி அறிவதற்காக சுகாதாரமிக்க நபர்களிடம் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சியில், பலரிடம் டாக்சோபிளாஸ்மா விட்டு சென்ற அடையாளம் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஒட்டுண்ணி பரவுவதற்கு முக்கிய காரணியாக பூனைகள் காணப்படுகின்றன. தொற்று பாதித்த இரையை பூனை சாப்பிடும்போது, அதன் உடலில் ஒட்டுண்ணி தங்கி விடுகிறது. 2 வாரங்களில் பூனையின் கழிவு பொருட்களில் அதிக எண்ணிக்கையிலான ஒட்டுண்ணிகள் வெளியேறுகின்றன.

அதனைத்தொடர்ந்து இந்த வகை ஒட்டுண்ணி அதிக வெப்பநிலையையும் ஏற்று கொண்டு, சுற்றுச்சூழலில் நீண்டகாலம் உயிர்வாழ கூடிய தன்மையுடன் உள்ளன. பூனைகளில் இருந்து வெளியேறும் கழிவு பொருட்கள் கால்நடைகள் புல்மேயும்போது, அதன் வழியே அவற்றுக்குள் சென்று தசை பகுதியில் வசிக்கின்றன. அதன்பின்னர் அந்த கால்நடைகள் இறைச்சிக்கு கொண்டு செல்லப்படும்போது, அவற்றை மனிதர்கள் உட்கொள்ளும்போது அல்லது பூனைகளால் அசுத்தம் ஏற்பட்ட குடிநீரின் வழியே மனிதர்களுக்கு தொற்று ஏற்படுகிறது.

மேலும் இதேபோன்று கர்ப்பிணியாக உள்ள ஒருவர் முதல் முறை தொற்று பாதிப்புக்கு ஆளாகும்போது, அது பிறக்க இருக்கிற குழந்தைக்கும் கூட கடத்தி செல்லப்பட்டு தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த வகை வியாதி டாக்சோபிளாஸ்மோசிஸ் என கூறப்படுகிறது. பொதுவாக வயதுக்கு வந்த நபர்களிடமே இந்த பாதிப்பு நிலை அதிகம் என மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இருந்தாலும் வயது முதிர்ந்தோர் அல்லது குறைவான நோயெதிர்ப்பு ஆற்றல் கொண்டவர்கள் அல்லது கர்ப்ப காலத்தில் தொற்று ஏற்படுபவர்களுக்கு இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. இதனால், மங்கலான பார்வை ஏற்படுவதுடன், ரெட்டினாவில் ஏற்படும் தழும்பு பாதிப்பினால், நிரந்தர பார்வை இழப்பும் ஏற்பட கூடும்.

இந்நிலையில் இந்த வியாதி லேசாக பாதிப்பு ஏற்படுத்தியிருக்கும்போது, ஒரு சில மாதங்களில் அதனை மருத்துவர்கள் குணப்படுத்தி விடுகின்றனர். இந்த தொற்று பரவலை சரிசெய்ய முடியாது என்றாலும், அதனை தடுக்க முடியும். இதற்காக இறைச்சியை 66 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலாக சமைக்கவும் அல்லது சமைப்பதற்கு முன் அதனை அதிக குளிர்பதன சூழலில் வைக்கவும் கூறப்படுகிறது. இதனால், ஒட்டுண்ணி அழிந்து விடும். பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன் நன்றாக கழுவ வேண்டும். சுகாதாரமற்ற குடிநீரை தவிர்க்க வேண்டும். பூனையின் கழிவுகளை அகற்றும்போது கையுறைகள் அணிந்து கொள்ள வேண்டும். அதன்பின்னர் நன்றாக கைகளை கழுவி விட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.