இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்திருப்பது, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய எதிரி நாடாக பாகிஸ்தான் பார்க்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விசயம் தான். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து சுதந்திரத்திற்குப் பிறகு, தனி நாடகா பாகிஸ்தான் சென்றாலும், தொடர்ச்சியாக இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை பிரச்சனைகள் இருந்துகொண்டு தான் வருகின்றன.

இதன் காரணமாக, இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு அவ்வப்போது மூக்கை நுழைப்பை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் யார் பிரதமராக இருந்தாலும், அந்நாட்டின் பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும், இந்தியாவின் உள் விவகாரங்களில் அடிக்கடி ஏதாவது கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான், இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்திருப்பது, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது.

இந்தியாவில் புதிதாக இயற்றிய 3 புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் இன்று 19 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கி உள்ளனர்.

இது தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ள கருத்தில், “இந்த பிராந்தியத்தில் ஜனநாயகம் குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “இந்தியாவை முரட்டு நாடு” என்று, அழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “இந்தியா உலக அமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளது” என்றும், பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். இது, உலக அளவில் பெரிதாக கவனிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் பவாத் சவுத்ரி, தற்போது விவசாய சட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ளார். இந்த கருத்து, இந்தியாவில் விவசாயிகளின் போராட்டங்களைத் தூண்ட முயற்சி செய்து உள்ளார் என்றும், கூறப்படுகிறது.

குறிப்பாக, “இந்தியாவின் நிலைமை காரணமாக உலகம் முழுவதும் பஞ்சாபியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் நடக்கும் சம்பவங்கள் குறித்து உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்கள் வேதனையில் உள்ளனர். பஞ்சாபியர்கள் தங்கள் ரத்தத்தை சுதந்திரத்திற்கு விலையாக கொடுத்து உள்ளனர். அவர்கள், தங்கள் சொந்த முட்டாள் தனங்களுக்குப் பலியாகிறார்கள்” என்று, பவாத் சவுத்ரி கூறி உள்ளார்.

இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து, பாகிஸ்தான் கூறி வரும் இந்த கருத்து, இந்தியாவின் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இது இந்தியாவில் உள்ள விவசாயிகளின் போராட்டங்களை மேலும் தூண்டிவிட முயற்சி செய்கிறது என்று பார்க்கப்பட்டாலும், பாகிஸ்தான் கருத்தால் பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போது இதற்கு எது மாதிரியான பதில் அளிக்க வேண்டும் என்பது புரியாமல் குழம்பிப்போய் உள்ளதாகவும், விமர்சிக்கப்பட்டு வருகிறது என்றும், கூறப்படுகிறது.

இதனிடையே, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பஞ்சாப் மாநில சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி.
லக்மிந்தர்சிங் ஜாக்கர், தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இது தொடர்பான தனது ராஜினாமா கடிதத்தை அவர், மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால், பஞ்சாபில் போராட்ட தீ மேலும் பற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.