பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய பெண்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை நடத்த பாகிஸ்தான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்தது வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட 6 வயது சிறுமியை உள்ளூர் நபர் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தார்.
இப்படியாக, பாகிஸ்தானில் பாலியல் குற்ற வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று, அந்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனையாக அந்நாட்டில் பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இப்படியான தண்டனை
வழங்கும் போது, உலக மனித நேய ஆணையத்துக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதால், அந்நாட்டு அதிகாரிகள், நீதித்துறை மற்றும் சட்டத்துறை மட்டத்தில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த தீவிர ஆலோசனைக்குப் பின், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டோரின் தேசிய அளவிலான பட்டியல் தயாரிக்கப்படும் என்றும், அதில் அதி தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்ய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இறுதியாக முடிவு செய்யப்பட்டது. இதை அவசர சட்டமாக எடுத்துக்கொண்டு, பாலியல் குற்றங்களை விரைந்து விசாரிக்கும் வகையில், சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தவும் 4 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.
இந்த சட்டத்தின் படி , பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக செயல்பட்டு வற்புறுத்தி பாலியல் செய்வது, 16 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது போன்ற செயல்கள் அனைத்து சட்ட விரோதமாக கருதப்படும். இதன்படி குற்றவாளிக்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய முறைகளும் கொண்டுவரப்பட்டன. இது, உலக அளவில் மிகப் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம், லாகூர் உயர்நீதிமன்றத்தில் கன்னித்தன்மை பரிசோதனை குறித்து வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு, கடந்த திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்களுக்குக் கன்னித் தன்மை பரிசோதனை நடத்த” அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
அத்துடன், “பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானவர்களிடம், அவர்களது கன்னித் தன்மையை உறுதி செய்ய நடத்தப்படும் இரு விரல் சோதனை சட்ட விரோதமானது” என்றும், நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கு, மருத்துவ அடிப்படை இல்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தைப் புண்படுத்தும் என்றும், நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விசயம், அந்நாட்டில் பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.