பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த போலி சாமியாருக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்காவின் நியூ யார்க் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிக்ஸிவம் நிறுவனர் கெய்த்ரானியருக்குத் தான், இப்படி ஒரு அதிரடியான மற்றும் அதிக பட்சமான தண்டனை கிடைத்து உள்ளது. கெய்த்ரானியர், வாழ்க்கை நெறிமுறைகள் தொடர்பான தன்னம்பிக்கை பேச்சுகளைப் பேசி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இதன் காரணமாக, இவருக்கு ஆண்கள் - பெண்கள் என பலரும் தீவிரமான தொண்டர்களாக மாறியுள்ளனர்.
நியூயார்க்கை தலைநகராகக் கொண்டு செயல்படும் இவரது மல்டி லெவல் மார்க்கெட்டிங் அமைப்பில், பல ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கடந்த 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மனித நேய கோட்பாடுகளால் தாம் வழி நடத்தப்படுவதாகக் கூறுகொள்கிறது.
அத்துடன், “ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றுகிறோம்” என்பது தான் அந்த அமைப்பின் தாரக மந்திரமாக உள்ளது.
மேலும், “சுமார் 16 ஆயிரம் மக்கள் மத்தியில் நாங்கள் பணியாற்றுகிறோம் என்றும், அமெரிக்க, கனடா, மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம்” என்றும், அந்த அமைப்பு கூறி வந்தது.
முக்கியமாக, நிக்ஸிவம் அமைப்பு “தங்களது பாலியல் பாடத்திட்டத்தில், ஆண்கள் பல பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதே நேரம் பெண்கள் அப்படி இருக்க கூடாது” என்றும் போதித்து வந்தது.
ஆனால், இந்த அமைப்பு அடிமை முறையில் பெண் உறுப்பினர்களை நடத்தி வருவதாகத் தொடக்கத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. 60 வயதாகும் கெய்த்ரானியர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாகவும், சிறுவர்களை பயன்படுத்தி பல ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும் அவர் மீது புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கின் விசாரணை ப்ரூக்ளினில் நடைபெற்றது. விசாரணையில், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மை என்று தெரிய வந்தது.
குறிப்பாக, “பல பெண்களுக்கு இடுப்பிற்குக் கீழ் சூடு வைத்து, இவள் பாலியல் அடிமை என்பதைப் பறைசாற்றும் விதமாக, கெய்த்ரானியர் பெயரை அடையாளமாக இட்டுள்ளதாகவும்” பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது, பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.
மேலும், போலி சாமியார் கெய்த்ரானியர், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், அப்படி பாலியல் பலாத்காரம் செய்த பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்து, தொடர்ந்து மிரட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அப்போது, பல பெண்கள் இந்த அமைப்புக்கு எதிராகவும், கெய்த்ரானியர் எதிராகவும் கொதித்து எழுந்து சாட்சி அளித்தனர். முக்கியமாக, தாங்கள் எப்படியெல்லாம் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோம், அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டோம் என்றும், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிகோலஸ், குற்றச்சாட்டுக்கு ஆளான கெய்த்ரானியருக்கு 1.75 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தார்.
குறிப்பாக, பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கெய்த்ரானியருக்கு அதிக பட்சமாக 120 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நியூயார்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பையும் அளித்தது.
“இன்றைய இந்தத் தண்டனைக்குப் பிறகு கெய்த்ரானியர் இனி மக்களை பலிகடா ஆக்க முடியாது, அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் சேத் டுகார்ம் கூறினார்.
ஆனால், கெய்த்ரானியர் வழக்கறிஞர், “கெய்த்ரானியர் ஒரு நிரபராதி என்றும், அவருக்கு எதிராக ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன” என்றும் குற்றம் சாட்டினார்.