இங்கிலாந்தில் ஒமிக்ரானை விட 10 மடங்கு வேகமாக பரவும் எக்ஸ்இ எனப்படும் புதிய வகையான வைரஸ் உருமாற்றம் அடைந்து வருவது, உலக மக்களை மீண்டும் கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
உலகத்தையே புரட்டிப்போட்ட கொரோனா என்னும் பேரலையானது, இந்தியா உட்பட ஒட்டு மொத்த உலகத்தையே திருப்பிப் போட்டது.
உலகில் எப்படி கிமு, கிபி என்று ஒரு மைல் கல் வைத்து வரலாறுகள் வரையறுக்கப்பட்டதோ, அதே போல் தற்போது கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என்று சமகால வரலாற்று நிகழ்வுகள் வரையறுக்கப்பட்டு வருகிறது.
அதாவது, கொரோனா என்னும் கொடிய வைரசானது, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து மற்ற உலக நாடுகளுக்குத் தொற்றாக பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த கொரோனா என்னும் கொடிய வைரஸ், முதல் அலையை கடந்து, 2 வது அலையும் வந்து, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் 3 வது அலையும் கடந்திருக்கிறது.
இவற்றில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ், தற்போது தான் மெல்ல இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. ஆனால், இந்தியாவைத் தவிர்த்து சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் கொரோனா 4 வது அலையே வந்துவிட்டு சென்று விட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
இப்படியான சூழலில் தான், சீனாவின் கிழக்கு கடற்கரை உள்ளிட்ட அந்நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று தற்போது மீண்டும் பரவி வருவதாக செய்தகிள் வெளியாக, பெரும் பீதியை ஏற்படுத்தின.
இதனால், சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, அங்கு ஊரடங்கு விதிகள் மீண்டும் மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டு வந்தன. அத்துடன், பல ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா மீண்டும் பரவிக்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் தான், “ஒமிக்ரானை விட 10 மடங்கு வேகமாக பரவும் புதிய உருமாற்ற வைரஸ், இங்கிலாந்தில் தற்போது வேகமாக பரவி வருவதாக” செய்திகள் வெளியாகி, உலக மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
அந்த வகையில், தறபோது புதிதாக பரவத் தொடங்கியிருக்கும் கொரோனா வைரசிற்கு ‘எக்ஸ் இ’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த வைரசானது, “ஒமிக்ரானில் இருந்து உருவான பிஏ-1, பிஏ-2 வால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து உருமாற்றம் அடைந்து உள்ளது” என்றும், ஆராச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக, “இந்த வகையான வைரசால் கடந்த மாதம் 19 ஆம் தேதி முதன் முதலில் கண்டறியப்பட்டது என்றும், இது வரையில் சுமார் 700 பேர் இந்த வைரசால் இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என்றும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், “இங்கிலாந்தைச் சுற்றி உள்ள மற்ற நாடுகளில் இது காணப்படவில்லை என்றாலும், உருமாறியிருக்கும் இந்த புதிய வகை வைரசால் மீண்டும் உலக மக்கள் கடும் பீதியிடைந்து உள்ளனர்” என்றும் கூறப்படுகிறது.
முக்கியமாக, உலக அளவில் மீண்டும் புதிய வகை கொரோனாவால், மீண்டும் ஒரு கொரோனா அலை உருவாகுமா?” என்கிற அச்சமும் ஏற்பட்டு உள்ளது.
இதனால், ‘எக்ஸ் இ’ என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த வகையான கொரோனா தொற்று, மற்ற நாடுகளுக்கும் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு தற்போது ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.