உக்ரைன் மீது போர் தொடுக்காமல் இருந்தால் ரஷியாவுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

மேலும் ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, நேட்டோ படைகள் தெரிவித்தன. மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் ஆயுதங்களை அனுப்பிவைத்தன. இதனால், ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்தது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தன.

அதனைத்தொடர்ந்து, பல்வேறு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்க அதிபரின் எச்சரிக்கை என பலதரப்பு செயல்பாடுகளுக்கு பின்னர் கிரிமியாவில் நடைபெற்று வந்த போர் பயிற்சி நிறைவு பெறுவதாகவும், படைகள் முகாம் திரும்புகின்றன என்றும் ரஷியா அறிவித்தது. ஆனால், உக்ரைன் எல்லையில் தனது படைகளை குறைப்பதாக கூறியபோதும், ரஷியா தனது படைகளை தொடர்ந்து எல்லையில் நிலைநிறுத்தியுள்ளது அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைன் மீது இன்னும் சில நாட்களில் ரஷியா படையெடுக்கலாம் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்காமல் இருந்தால் ரஷியாவுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோவை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளிங்கன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்காமல் இருந்தால் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், அடுத்த வாரம் நாங்கள் குறிப்பிட்டிருந்த தேதியில் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது. அதுவரை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ரஷியா தெரிவித்துள்ளது. ஒருவேளை வரும் நாட்களில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ரஷியா பேச்சுவார்த்தையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெளிவாக தெரியும். உக்ரைன் பிரச்சினையை தீர்ப்பதற்கு ராஜாங்க ரீதியிலான மற்றும் பேச்சுவார்த்தையே பொறுப்பான தீர்வு என்பதால் அடுத்தவாரம் ஐரோப்பாவில் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோவை சந்திக்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளிங்கன் திட்டமிட்டுள்ளார்’ தெரிவித்தார்.