அமெரிக்காவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயருக்கும், நாகர்கோவில் பெண் என்ஜினீயருக்கும் சென்னையில் தமிழ் முறைப்படி நேற்று திருமணம் நடைபெற்றது.
சென்னை மாதவரம் பகுதியில் வசிக்கும் நாகர்கோவில் சாமிதோப்பை பூர்விகமாக கொண்ட ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரனின் மகள் அகிலா அவருக்கு வயது 28. பெண் என்ஜினீயரான இவரும், அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம் மிச்சிகன் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பீட்டர் லாக்கர் அவருக்கு வயது 30, இருவரும் காதலித்து கரம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் திருமணம் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. அமெரிக்க மாப்பிள்ளை பீட்டர் லாக்கர் தமிழரின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி-சட்டை அணிந்திருந்தார். அவரது தாயார் லிசா லாக்கர், சகோதரர் ஜேக் லாக்கர், அவரது மனைவி மேகன் ஆகியோரும் நமது பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். அய்யா வழி முறையில் ‘மவுளி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ...’ என்ற பாடல் இசைக்க, மணமகன் பீட்டர் லாக்கர் மணப்பெண் அகிலா கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் தமிழ் முறைப்படி சடங்குகள், சம்பிரதாயங்கள் நடைபெற்றன.
அமெரிக்கரை மணந்தது குறித்து அகிலா கூறியதாவது: நான், சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்தேன். பின்னர் அமெரிக்காவில் 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை மேல்படிப்பு படித்தேன். அதன்பின்னர் அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணிக்கு சேர்ந்தேன். அந்த கம்பெனியில் சீனியர் சாப்ட்வேர் என்ஜினீயராக பீட்டர் லாக்கர் பணியாற்றினார். முதலில் நானும், அவரும் நட்பாக பழகி வந்தோம்.
அதன்பின்பு நான் கடந்த 2018-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினேன். அப்போது பீட்டர் லாக்கரும், அவரது குடும்பத்தினரும் என்னை மிகவும் கனிவாக கவனித்துக் கொண்டனர்.
அதன்பின்னர் நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கினோம். பெற்றோரிடம் எப்படி காதலை சொல்வது என்று முதலில் தயங்கினேன். பின்னர் அமெரிக்காவில் இருந்து ‘வீடியோ’ கால் மூலம் பெற்றோரிடம் கூறினேன். அப்போது பீட்டர் லாக்கர், அவரது தாயாரும் எனது தந்தையிடம் பேசினார்கள்.
அதனைத்தொடர்ந்து எங்கள் காதலுக்கு பெற்றோர்களுடைய சம்மதம் உடனடியாக கிடைத்தாலும், கொரோனாவால் திருமணம் தள்ளிப்போனது. தற்போது இருவீட்டார், உற்றார்-உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நல்லபடியாக நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும், பீட்டர் லாக்கரும் சேர்ந்து அமெரிக்காவில் வீடு வாங்கி இருக்கிறோம். புது வீட்டில் புதுமண வாழ்க்கையை தொடங்க போகிறோம் என தெரிவித்தார்.
அதன்பின்னர் தமிழ் பெண்ணை மணந்தது குறித்து பீட்டர் லாக்கர் கூறியதாவது: எனது தந்தை பிலீப் லாக்கர் மரணமடைந்த போது, அகிலா ஆறுதல் கூறி என்னை தேற்றினார். எனவே எங்கள் நட்பு காதலாக மாறியது. எனக்கு தமிழ் கலாசாரம், நாகரிகம், பண்பாடு மிகவும் பிடிக்கும். தென்னிந்திய உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவேன். சென்னை வந்ததும் குடும்பத்துடன் காஞ்சீபுரம் கோவிலுக்கு சென்று வந்தேன். அகிலாவுடன் சேர்ந்து மாமல்லபுரம் சிற்ப கோவிலுக்கு செல்ல உள்ளேன். தஞ்சை பெரிய கோவில் போன்ற புராதன கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை ஆகும். தமிழில் ‘செல்லம்’, ‘என்ன பண்றீங்க’ ‘வணக்கம்’ போன்ற வார்த்தைகள் எனக்கு தெரியும். தமிழ் மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.