டெல்டாவை விடவும் பயங்கரமான லாம்ப்டா வகை கொரொனா வைரஸ், உலகின் 30 நாடுகளில் வேகமாகப் பரவி உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கொரோனா வைரஸின் கோரிப் பிடியில் இருந்து இன்னமும் உந்த உலக நாடும் முழுமையாக மீண்டு வரவில்லை. ஆனால், அதே நேரத்தில், நாளுக்கு நாள் புதிது புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
உலகின் பல நாடுகளில் ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ், பெரிதாக அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது லாம்ப்டா என்ற வகையான உருமாற்றமடைந்த கொரோனா வைரஸும், அதி தீவிரமாகப் பரவி வருவது ஒட்டு மொத்த உலக நாடுகளைப் பீதியடைச் செய்து உள்ளது.
அந்த வகையில், பெரூ நாட்டில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட லாம்ப்டா வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ், உலகின் 30 நாடுகளில் பரவியிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இந்த வகையான கொரோனா வைரஸ், இன்னும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று, பிரிட்டன் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது.
அதே நேரத்தில், யுகே சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, “பெரூ நாட்டில் தோன்றியதாகக் கருதப்படும் லாம்ப்டா வகை கொரோனா வைரஸ், உலகின் 30 நாடுகளில் பரவியிருப்பதாக” கூறியுள்ளது.
அதாவது, கடந்த டிசம்பர் மாதம் இந்த வைரஸ் பெரு நாட்டில் கண்டறியப்பட்ட நிலையில், தென் அமெரிக்கா நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க இவ்வகை வைரஸே முழு காரணமா அமைந்திருக்கிறது.
பெரு நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளான 80 சதவீத மக்களுக்கு, லாம்ப்டா வகை வைரஸ் தான் பரவி இருப்பது தற்போது கண்டறியப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக, இந்த லாம்ப்டா வகை வைரஸ் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 30 நாடுகளில் பரவி இருக்கிறது.
முக்கியமாக, இந்தியாவில் பரவிய டெல்டா வகை கொரோனா தான், இது வரை வந்ததிலேயே மிகவும் கொடிய வகை கொரோனா என்று கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை விடவும் லாம்ப்டா வகை கொரோனா வைரஸ் கொடியது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள், “டெல்டாவை விடவும், இந்த லாம்ப்டா வகை கொரோனா வைரஸ் மிகவும் கொடியது என்றும், அதிகம்
பரவக்கூடியது” என்றும் கூறி உள்ளனர்.
அத்துடன், இங்கிலாந்தின் பொதுச் சுகாதாரத் துறையானது, “லாம்ப்டா பரவும் தன்மை அதிகம் கொண்டது அல்லது கொரோனா தடுப்பூசியையும் வீரியமிழக்கச் செய்து, மனித உடலைத் தாக்கும் தன்மை கொண்டது” என்றும், கண்டறிந்து கூறியுள்ளது.
இதனால், இந்த லாம்ப்டா வகை கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் தற்போது முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
தற்போது நடத்தப்பட்டு வரும் ஆய்வில், “லாம்ப்டா வகை கொரோனா வைரஸ், ஸ்பைக் புரோட்டினில் 7 முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது” அறியப்பட்டு உள்ளது.
மேலும், உலகமே கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தில் சற்று மீண்டிருக்கும் வேளையில், தற்போது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள லாம்ப்டா வகை கொரோனா வைரஸ், 3 ஆம் அலையாக உருவாகுமா?” என்ற சந்தேகமும், பீதியும் உலக நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.