இன்றைய தினம் வானில் அதிசய நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கின்றன.

அறிவியல் முறைப்படி, இரு கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வானது, கிரகங்களின் இணைவு என்று அழைக்கப்படுகிறது. சூரிய குடும்பத்தின் இரு பெரும் கிரகங்களான வியாழனும் - சனியும் இணையும் நிகழ்வை பேரிணைவு என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். .

சூரிய குடும்பத்தில் உள்ள பூமி உள்ளிட்ட கிரகங்கள் சூரியனை வெவ்வேறு நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பூமி சூரியனைச் சுற்றி வர ஓராண்டு எடுத்துக் கொள்கிறது என்பது நமக்கு தெரிந்த ஒரு விசயம்.

இதே போல வியாழன் ஒருமுறை சூரியனைச் சுற்றி வர 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. ஆனால், சனி கிரகம் ஒருமுறை சூரியனை சுற்றிவர இருபத்து ஒன்பதரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இப்படியாக, வெவ்வேறு சுற்று வட்டப் பாதைகளில் சுற்றி வரும் இந்த கிரகங்கள் அவ்வப்போது ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் நிகழ்வும் அறிவியல் பூர்வமாக வானில் நடப்பதுண்டு.

பூமியை ஒத்த கிரகம் என்று கருதப்படும் செவ்வாய்க் கோள், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வந்து சென்றது.

அதே போல், வியாழன் மற்றும் சனி கோள்கள் இன்றைய தினம் பூமிக்கு மிக அருகில் வருகின்றன. வாயு பெருங்கோள்களான சனியும், வியாழனும் தொடர்ந்து கடந்த 3 மாத காலங்களாக வானில் உள்ள மேற்கு திசையில் காணப்பட்டு வருகின்றன. தற்போது, இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன.

முக்கியமாக, இன்றைய தினம் மிகச் சரியாக மாலை சூரியன் மறைந்த பிறகு, அதாவது மாலை 5.45 மணிக்கு மேல், இந்த 2 கோள்களும் மேற்கு திசையில் வானத்தில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன.

மேலும், இந்த சனி மற்றும் வியாழன் கோள்களானது, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அருகருகே நெருங்கி வரும் என்றும் கூறப்படுகிறது.

எனினும், இதே போன்று ஒன்றாக காட்சி அளித்தது கடந்த 1623 ஆம் ஆண்டு என்றும், அதாவது மிகச் சரியாக 397 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. அதற்குப் பிறகு, இன்றைய தினம் அந்த அரிய வகையான நிகழ்வு நடக்க இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக, மீண்டும் வருகிற 2080 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி தான் வியாழன் - சனி ஆகிய இரு கோள்களும் ஒன்றாக தோன்றும் என்றும், கூறப்படுகிறது.

இந்த இரு கோள்களுக்கும் இடையில், சுமார் 600 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். இந்த இரு கோள்களும் நெருங்கும் போது, 0.1 டிகிரியில் இணைந்திருப்பது போல நமக்குத் தோன்றும்.

முன்னதாக, கடந்த 2000 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி அந்த கோள்கள் அருகருகே வந்து சென்றன. ஆனால், அப்போது பகல் பொழுதில் சூரியன் அருகில் இருந்து காட்சி அளித்ததால், நம்மால் அவற்றைப் பார்க்க முடியாமல் போனது.

ஆனால், தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய தினம் சூரியன் மறைவிற்குப் பிறகு மாலை நேரத்தில் வருவதால், அவற்றை இன்று நாம் காண முடியும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று நிகழும் பேரிணைவின் போது இரு கிரகங்களும் இணைந்து ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல வானில் தோன்றும். இவை, பார்ப்பது மிக அழகாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.