17 வயது சிறுமியை திருமணம் செய்த 78 வயது முதியவர் ஒருவர், திருமணமான 22 வது நாளில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியா நாட்டில் தான், இப்படி ஒரு விநோதமான சம்பவம் அரங்கேறிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நமது முன்னோர்கள் சொல்வதுண்டு, “திருமணங்கள் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது” என்று, ஆனால் அது உண்மையா? என்று கேட்கும் அளவுக்குத் தான் தற்போது நடைபெறும் சம்பங்கள் எல்லாம் சந்தேகத்தைக் கிளப்புகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான், இந்தோனேசியா நாட்டில் தற்போது நடந்து உள்ளது.

இந்தோனேசியா நாட்டில் மணமகன், மணமகளின் குடும்பத்திற்கு வரதட்சணை கொடுப்பது ஒரு பொதுவான நடைமுறையாக தற்போது வரை இருந்து வருகிறது.அதாவது, இந்தோனேசியாவைச் சேர்ந்த 78 வயதான அபா சர்னா என்ற முதியவர், கடந்த மாதம் 17 வயது நோனி நவிதா என்ற சிறுமியை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இருவருக்கும் திருமணம் ஆகி வெறும் 22 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், தனது 17 வயது மனைவியை பிரிந்து செல்ல, 78 வயதான அபா சர்னா முடிவு செய்து உள்ளார்.

இதனையடுத்து, கடந்த வாரம் அவர் விவாகரத்து கோரி, அந்நாட்டின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த புதுமணத் தம்பதியினர் தாக்கல் செய்த விவகாரத்து மனு, அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக மிகுந்த கவனத்தைப் பெற்றது. அதே நேரத்தில், திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட முழுமை பெறாத நிலையில், அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே கணவர் விவாகரத்து கோரி தன் மனைவி நோனிக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம், அவர்களது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அத்துடன், “78 வயது கணவனுக்கும் 17 வயது மனைவிக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும், அப்படி இருக்கம் போது, அவர் ஏன் விவகாரத்துக் கோரி மனு தாக்கல் செய்தார்?” என்று, பெண்ணின் குடும்பத்தாருக்குத் தெரிய வில்லை.

இது தொடர்பாக நோனியின் சகோதரி ஐயன் பேசும் போது, “கணவன் - மனைவி இருவருக்கும் இடையில் பெரிய சண்டையோ, சச்சரவுகளோ எதுவும் இல்லை என்றும், பிரச்சனை இருப்பது போன்ற எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் அவர்களுக்குள் நடைபெற வில்லை” என்றும், குறிப்பிட்டார்.

“ஆனால், திடீரென்று இப்படியொரு செயலை கண்டு நான் கடும் அதிர்ச்சியடைந்தேன் என்றும், இதில் ஆச்சரியம் என்னவென்றால், இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்தபோதிலும் எங்கள் குடும்பத்திற்கு அபா சர்னாவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், இதில் எங்களுக்கு முழு சம்மதம் மட்டுமே இருந்தது” என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும், “இந்த விவகாரத்து முடிவு அபா சர்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து வந்து உள்ளது என்றும், அவர்கள் திருமணத்தை எதிர்த்ததாகத் தோன்றுகிறது” என்றும், அவர் கூறினார்.

அதே நேரத்தில், “திருமணத்திற்கு முன்னதாக 17 வயதான சிறுமி நோனி கர்ப்பமாக இருந்ததால் அந்த தம்பதியினர் பிரிந்ததாகவும்” குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. ஆனால், இந்த குற்றச்சாட்டினை நோனி சகோதரி ஐயன் மறுத்து உள்ளார்.

அத்துடன், திருமணத்தின் போது கணவன் அபா சர்னா சார்பில் மணப்பெண் வீட்டாருக்கு கொடுத்த ஒரு மோட்டார் சைக்கிள், மெத்தை, கிளோசெட் மற்றும் இந்திய மதிப்பிலான பணம் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை நோனிக்கு கொடுத்திருந்தார். தற்போது, கணவன் - மனைவி இடையே விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த வரதட்சணை பொருட்கள் ஒரு டிரக் மூலம் திருப்பிக் கொண்டு செல்லப்பட்டு உள்ளன. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.