அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடனும் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, தற்போது பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
அதிரடிக்கு பெயர் பெற்ற அதிபர் ட்ரம்ப் பிரச்சாரத்தின்போது அதிரடியாக பேசிவருகிறது. இந்தநிலையில், பிரச்சாரத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், ‘அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் என்ன செய்வேன் என்று கற்பனை செய்தீர்களா? வரலாற்றில் மிக மோசமான வேட்பாளரிடம் தோல்வியடைந்தால், என்னால் நன்றாக இருக்க முடியாது. அதனால், ஒருவேளை இந்த நாட்டிலிருந்து வெளியேறிவிடுவேன். எனக்குத் தெரியாது’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சைக் கேட்டு கூட்டத்திலிருந்து சிரித்தார்கள்.
முன்னதாக பிரச்சாரத்தில் பேசிய ட்ரம்ப், ‘ஜோ பிடன் குடும்பம் மோசடிக் குடும்பம். அவர்களைக் குடும்பத்துடன் சிறையிலடைக்கவேண்டும்’ என்றும் கடும் காட்டமாக பேசியிருந்தார்.
இந்நிலையில், `ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இந்தியாவுக்கு எதிரானவர்' என்றும், அவர் சீனாவுக்குச் சாதகமானவர் என்று ட்ரம்ப்பின் மகன் ஜூனியர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஆதரவாக அவரது மகன் ஜூனியர் ட்ரம்ப் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆதரவாளர்களிடம் ஜூனியர் ட்ரம்ப் கூறும்போது, “ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இந்தியாவுக்கு எதிரானவர். அவர் சீனாவுடன் நட்புடன் இருக்கக் கூடியவர். நாம் சீனாவின் அச்சுறுத்தல்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனை அமெரிக்க இந்தியர்களைவிட வேற யாராலும் புரிந்துகொள்ள முடியாது. நிச்சயம் ஜோ பிடன் இந்தியாவுக்கு எதிரானவர்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்
இரு கட்சியினரும் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதில், ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். ஜோ பிடனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தலைவர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், மிச்சிகன் மாநிலம் மஸ்கேகானில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சியினரை விமர்சித்தார். அடிமைத்தனத்துடன் தொடர்புடைய வரலாற்று நபர்களின் சிலைகளை அகற்றுவதற்கான முயற்சிகள் தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்தார்.
‘அமெரிக்க வரலாற்றை அழிக்க வேண்டும், அமெரிக்க மதிப்புகளை கெடுக்க வேண்டும், அமெரிக்க வாழ்க்கை முறையை அழிக்க வேண்டும் என்பதே தீவிர இடதுசாரிகளின் திட்டம். அதைத்தான் அவர்கள் செய்ய முயற்சிக்கிறார்கள். ஜோ பிடனுக்கு எதிரான போட்டியில் உள்ள முக்கியமான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. நமது அற்புதமான பாரம்பரியத்தை நாம் பாதுகாக்கிறோமா அல்லது தீவிர இடதுசாரிகள் அனைத்தையும் அழிக்க அனுமதிக்கிறோமா? என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்’ என ட்ரம்ப் கூறினார்.