ஜப்பானில் ஏற்பட்டுள்ள அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதுடன், இது வரை 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அதாவது, ஜப்பானில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, ரிக்டர் அளவில் 9.0 என்ற அளவில் இதே ஃபுக்குஷிமாவில் அதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், அங்கிருந்த அணுமின் நிலையங்கள் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து வெளியான அணு கதிர் வீச்சின் தாக்கம் இன்று அளவும் ஃபுக்குஷிமாவை சுற்றியுள்ள ஒட்டு மொத்த பகுதிகளிலும் காணப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே அளவுக்கு சற்று குறைவான நில நடுக்கம் அதே குறிப்பிட்ட பகுதியில் தற்போது நடந்திருக்கிறது.
ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள புகுஷிமா கடற்பகுதியை மையமாக கொண்டு தான், இந்த மிக பெரிய சக்திய வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நேற்று இரவு நேரத்தில் 7.4 புள்ளிகளாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
அதுவும், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வட கிழக்கே சுமார் 297 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புகுஷிமா நகரின் கடற்கரை பகுதியின் அருகில், இந்திய நேரப்படி இரவு 8.6 மணிக்கு தான் இந்த நில நடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
குறிப்பாக, அந்த கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் ஆளத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டிருப்பதால், அந்நாட்டு மக்கள் கடும் பீதி அடைந்து உள்ளனர்.
இந்த நில நிடுக்கத்தில் அந்த பகுதியில் உள்ள பல கடைகளின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து உள்ளன. இவற்றுடன், அந்த பகுதியில் இருந்த பல வணிக நிறுவனங்களில் இருந்த அலங்கார கண்ணாடிகளும் சில்லு, சில்லாக உடைந்து கொட்டி உள்ளன.
முக்கியமாக, இந்த கட்டிட இடிபாடுகளில் 2 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 100 க்கணக்கானோர் காயம் அடைந்து உள்ளதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் ஃபுக்குஷிமா, மியாகி இடையே புல்லட் ரயில் ஒன்று தடம் புரண்டதாக ஜப்பான் ரயில்வே துறை தெரிவித்து உள்ளது.
அத்துடன், சில கட்டிடங்களும் இடி விழுந்து உள்ளன. நில நடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளன.
குறிப்பாக, ரிக்டரில் அளவு கோலில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், டோக்யோவின் வட கிழக்கில் 8 அங்குல உயரத்திற்கு கடல் அலைகள் மேலே எழும்பியதால், அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஜப்பானின் நாட்டின் கிழக்கு பகுதியிலும் குறிப்பாக தலைநகர் டோக்கியோவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதாகவும், எனினும் அங்கு உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், அங்கும் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல், பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நகரங்களில் உள்ளூர் ரயில் சேவை சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் இயக்கப்பட்டது.
இதனிடையே, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். எனினும், அங்கு இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டு உள்ளது.