அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர்.
அமெரிக்க வரலாற்றில் 120 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் 66.9 சதவீத வாக்குகள் பதிவாயின. கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 11 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்தினர். மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டன. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் 270 பிரதிநிதி வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, அதிபராக முடியும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார்.
மிகவும் இழுபறியாக இருந்து வரும் அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், நியூ ஹெமிஸ்ஃபயர் ஆகியவற்றில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். ஃப்ளோரிடா, ஐயோவா, ஒஹியோ, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலையுடன் உள்ளார். ஆனால், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை ஏற்காத அதிபர் ட்ரம்ப் பல்வேறு மாகாணங்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மேலும் ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க் பதிலடி கொடுத்துள்ளார். அந்த ட்வீட், இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
ட்ரம்ப் பதிவைக் குறிப்பிட்டு கிரெட்டா, “இது அபத்தமானது. ட்ரம்ப் தனது கோபத்தைக் கையாள்வது தொடர்பாகச் செயலாற்ற வேண்டும். இதற்காக அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றைப் பார்க்க வேண்டும். அமைதியாகுங்கள் ட்ரம்ப். அமைதியாகுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட்டில் அப்படியென்ன சிறப்பென்று, நீங்கள் நினைக்கலாம். சிறப்பு இருக்கிறது@ காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்றுள்ள அட்டைப் படத்தை ‘இளைஞர்களின் சக்தி’ என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் டைம்ஸ் இதழ் வெளியிட்டிருந்தது. இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்தார்.
அப்போது ட்ரம்ப், ''இது அபத்தமானது. கிரெட்டா தனது கோபத்தைக் கையாள்வது தொடர்பாகச் செயலாற்ற வேண்டும். அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றைப் பார்க்க வேண்டும்'' என்றார்.
ட்ரம்ப்பின் அந்த பழைய ட்வீட்டை அப்படியே காப்பி செய்து, கிரெட்டா என்றிருந்த இடத்தில் ட்ரம்ப் என பெயர் மாற்றி, இப்போது கிரெட்டா பதிவிட்டிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்ட நிலையில், முன்பு அவர் குறிப்பிட்ட அதே வார்த்தைகளைக் குறிப்பிட்டு ட்விட்டரில் கிரெட்டா பதிலடி கொடுத்திருப்பது, பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.