“ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாகவும், டெரிக் சாவினுக்கு மரண தண்டனை அறிவிக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி அன்று, ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயதான கருப்பினத்தைச் சேர்ந்த நபரை, அந்நாட்டைச் சேர்ந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்து அதிரடியாக அவரை கைது செய்தனர். அந்த கைது நடவடிக்கையின் போது, 44 வயதான போலீஸ் அதிகாரியான டெர்ரக் சவுவின் என்பவர், கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டை போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் டயரின் அருகே தரையில் தள்ளி, அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்து நீண்ட நேரமாகப் பிடித்துக்கொண்டு இருந்தார்.

இதில், மூச்சுத்திணறல், பரிதாபமாக ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார். இதனையடுத்து, ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து அழுத்தியபோது, “என்னால் மூச்சு விட முடியவில்லை” என்று, அவர் உயிர் போகும் நேரத்தில் சத்தமாகக் கத்தியும், துளியும் இறக்கமற்ற அரக்க குணம் கொண்ட அந்த போலீஸ் அதிகாரி, அவரை விடாமல், அவர் சாகும் வரை, அந்த நபரை மூச்சு விட முடியாமல் விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது தொடர்பான வீடியோ வெளியானது. இதனைப் பார்த்த அமெரிக்க கறுப்பின மக்கள் கொந்தளித்துப் போனார்கள்.

இதனால், மிக கடுமையாக உணர்ச்சிவசப்பட்ட அந்நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர், ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டம், அந்நாட்டில் புரட்சித் தீயை பற்ற வைத்தது. இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் காட்டு மிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள், அமெரிக்காவை மட்டுமில்லாமல் உலகையே உலுக்கியது. இதனால், அமெரிக்காவையும் தாண்டி, உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசார் மற்றும் போலீஸ் நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட போலீசார் டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, 4 போலீசாரும், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில், சம்மந்தப்பட்ட அதிகாரி டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.

டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

இதில், போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனையை அறிவித்து உள்ளது.

அதன் படி, வழக்கு விசாரணையின் அடிப்படையில் முன்னாள் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு 22 ஆண்டு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

அத்துடன், “அதிகாரத்தைத் தவறாகத் துஷ்பிரயோகம் செய்தது மற்றும் ஜார்ஜ் பிளாய்டுக்கு எதிராக அரங்கேற்றிய கொடூரத்தை கருத்தில் கொண்டு, இந்த தண்டனை வழங்கியதாக” நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர், “இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக” கவலைத் தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக, “குற்றவாளியான டெரிக் சாவினுக்கு அதிக பட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்றும், ஜார்ஜ் பிளாட் குடும்பத்தினர் வலியுறுத்து உள்ளனர். இதனால், ஜார்ஜ் பிளாட் குடும்பத்தினர் வலியுறுத்தும் மரண தண்டனை பற்றிய செய்தி, அந்நாட்டில் வைரலாகி வருகிறது.

மேலும், “ஜார்ஜ் பிளாட் கொலை வழக்கில், முன்னாள் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமா? என்று, அந்நாட்டில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.