உலகின் டாப் 10 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 37 வது இடத்தை பிடித்துள்ளதுடன், தொடர்ந்து 3 வது ஆண்டாக இந்த பட்டியலில் அவர் இடம் பிடித்துள்ளது சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஆண்டு தோறும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 18 வது ஆண்டாக இந்த ஆண்டும், உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
தற்போது, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் முதல் இடத்தை பிரபல நன்கொடையாளர் மெக்கென்சி ஸ்காட் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.
அதன்படி, உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 பெண்கள் யார் யார் இடம் பெற்றுள்ளனர் என்றால்..
1. நன்கொடையாளர் மெக்கென்சி ஸ்காட்
2. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்
3. ஐரோப்பிய ரிசர்வ் வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்ட்
4. ஜெனரல் மோட்டார்ஸ் சி.இ.ஓ. மேரி பார்ரா
5. நன்கொடையாளர் மெலிண்டா பிரஞ்சு கேட்ஸ்
6. பிடிலிட்டி இன்வென்ஸ்மெண்ட்ஸ் சி.இ.ஓ. அபிகாயில் ஜான்சன்
7. சான்டாண்டர் செயல் தலைவர் அனா பாட்ரிசியா போடின்
8. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்
9. தைவான் அதிபர் சாய் இங் வென்
10. அசென்சர் சி.இ.ஓ. ஜூலி ஸ்வீட்
ஆகியோர் உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 பெண்கள் ஆவர்.
அதே போல், உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு 37 வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து இந்த ஆண்டும் 3 வது முறையாக ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.
இதன்படி, மத்திய அயமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019 ஆம் ஆண்டு 34 வது இடம் பிடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020 ஆம் ஆண்டு சற்று பின் தங்கி 41 வது இடம் பிடித்திருந்தார். தற்போது இந்த 2021 ஆம் ஆண்டு மேலும் சில இடங்கள் முன்னேரி தற்போது 37 வது இடம் பிடித்து அசத்தி உள்ளார்.
மிக முக்கியமாக, ஃபோர்ப்ஸ் இதழின், உலகின் சக்திவாய்ந்த பெண்மணி பட்டியலில் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகள் ஜெர்மனியின் முன்னாள் அதிபர் மெர்கல் இடம் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், உலக அளவிலும் ஜெர்மனியின் உயர்ந்த தலைவர்களுள் ஒருவராக வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஏஞ்செலா மெர்கல், பல்வேறு சாதைகளுடன் தனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.
அதே போல், இந்தியாவின் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான ரோஷ்னி நாடார் 52 வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில், பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா 72 வது இடத்தில் உள்ளார். இதே போல், 88 வது இடத்தில் சமீபத்தில் ஐபிஓ வில் கலக்கிய நைகா நிறுவனத்தின் சிஇஓ ஃபால்குனி நாயர் இடம் பிடித்துள்ளார்.