சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து, அனைத்துப் பள்ளிகளையும் மூட அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.
உலகமெங்கும் வாட்டி வதைத்துக்கொண்டிருந்த கொரோனா என்னும் பெருந்தொற்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அதிகரித்த வேகத்தில் சற்று குறைந்து காணப்பட்டு வருகிறது.
ஆனால், கொரோனா வைரஸ் தொற்று முதன் முறையாகத் தோன்றியதாகக் கூறப்படும் சீனாவில், இதுவரை கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா தொற்று, அங்கு மீண்டும் வேகம் எடுத்து புதிய வகை வைரஸ் தொற்று நோயாகப் பரவ தொடங்கி உள்ளது.
இதனால், சீனாவை சுற்றி உள்ள அண்டை நாடுகளுக்கு மீண்டும் இந்த நோய் தொற்று விவகாரம், பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
முக்கியமாக, சீனாவின் வடக்கும் மற்றும் வடமேற்கு மாகணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் அதி வேகமாகப் பரவிக்கொண்டு வருகிறது.
அதே நேரத்தில், சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து உள்ளதால், அங்கு நாடு முழுவதும் மின்தடை அதிகரித்துக் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், சீனாவில் தொடர்ந்து 5 வது நாளாக கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால், அந்நாட்டில் மீண்டும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
அதே போல், கொரோனா அதிகம் பரவி உள்ள லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்குச் செல்ல மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.
இதன் காரணமாக, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே, அங்கிருந்து பிற மாகாணங்களுக்குச் செல்லவும் பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, சீனாவில் உள்ள லான்சோ மற்றும் ஜியோன் ஆகிய பகுதிகளில் கொரோனா பரிசோதனை அந்நாட்டு தற்போது அதிகரித்து உள்ளது.
மிக முக்கியமாக, சீனாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை உடனடியாக மூடவும் சீனா அரசு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா 2 வது அலை குறைந்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது, ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் மீண்டும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று மீண்டும் சீனாவில் அதிகரித்து உள்ளதால், ஜியான் மற்றும் லான்சோ இடையே 60 சதவீத விமானங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளன.