அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் அதிரடியாக முடக்கப்பட்டு உள்ளன.
உலகமே முழுமைக்குமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்நாட்டின் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன், அபார வெற்றி பெற்றார். அதன் படி, அவர் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46 வது அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். ஆனால், தற்போது இப்போது அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல், பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.
முக்கியமாக, “அமெரிக்க அதிபர் தேர்தலில் பல மோசடி நடைபெற்றுள்ளதாக” அவர் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை அடிக்கிக்கொண்டே வருகிறார்.
“அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி” நீதிமன்றத்திலும் அவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்குகளின் விசாரணை தற்போது அந்நாட்டின் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், தன்னுடைய தேர்தல் தோல்வியை முழுமையாக ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப், “அமெரிக்க மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும் படியும், தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கும் படியும் பேசுவது போன்ற ஆடியோ” கடந்த வாரம் வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜோ பைடன் வரும் 20 ஆம் பதவியேற்க உள்ளதால், அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஜோ பைடனின் இந்த வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை அவர் வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என்றும், துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை நோக்கி டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அப்போது, அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், போராட்டக்காரர்களைக் கலைந்து போகும்படி அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைய மறுத்ததோடு, போராட்டத்தை தொடரவே செய்துள்ளனர். இதனால், போலீசார் துப்பாகி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில், பெண் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அத்துடன், டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை நோக்கி முற்றுகையிட்டதால், வெள்ளை மாளிகை சுற்றிலும் அதிரடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய டிரம்ப், தான் பேசிய வீடியோக்களை டிவிட்டரில் பதிவேற்றம் செய்தார். இதனால், அவை சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அமெரிக்க மக்கள் பலரும் இதனை பகிர்ந்தனர்.
இதனையடுத்து, “வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, அந்த வீடியோக்களை டிவிட்டர் நிறுவனம் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கியது.
அதன் தொடர்ச்சியாக, “விதிகளை மீறியதற்காக அதிபர் டிரம்பின் @realDonaldTrump பக்கத்தை டிவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கி” உள்ளது. அதன் படி அடுத்த 12 மணி நேரம் அவரது டிவிட்டர் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
குறிப்பாக, “டிரம்ப் தொடர்ந்து வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்பினால் அவரின் டிவிட்டர் பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என டிவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை” விடுத்துள்ளது.
அதே போல் ஃபேஸ்புக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றிய வீடியோவை நீக்கி உள்ளது.
இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவன ஒருமைப்பாடு துணை தலைவர் கை ரோசன் கூறும்போது, “வீடியோவை நாங்கள் நீக்கியுள்ளோம். ஏனெனில், அது நடந்து
வரும் கலகங்களை மறைப்பதற்காக அல்ல. ஓரளவு வன்முறை கட்டுக்குள் வருவதற்கான சம நிலையை அது ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்” என்று, குறிப்பிட்டுள்ளார்.
அதே போல், சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் நிறுவனமும், டிரம்பின் கணக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு முடக்கி உள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொஸ்சேரி கூறும்போது, “அதிபர் டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு பக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், எங்களுடைய நிறுவனத்தின் 2 கொள்கை விதிகளை மீறியுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால், அந்த கணக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கு முடக்கப்படுகிறது என்றும், அந்த நேரத்தில், சமூக பக்கத்தில் அவரால் பதிவு எதுவும் பதிவுகளை வெளியிட முடியாது” என்றும், அவர் தெரிவித்து உள்ளார். உலக அரசியல் வரலாற்றில், அமெரிக்க அதிபரின் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.