“ராணுவ வீரர்களுக்கு வயாகரா மற்றும் செயற்கை ஆணுறுப்புகளை அரசே கொடுத்து வருவதாக” குற்றம்சாட்டிய எதிர்க் கட்சிகள், போராட்டம் நடத்தி வருகிறது.
பிரேசில் நாட்டில் இப்படி ஒரு சர்ச்சைக்குறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதாவது, பிரேசில் நாட்டில் உள்ள ராணுவ வீரர்களுக்கு வயாகரா, செயற்கை ஆணுறுப்புகளை அந்நாட்டு அரசாங்கமே வாங்கிக் கொடுப்பது, தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
இந்த செய்தியானது, அந்நாட்டில் ஊடகத்தில் செய்தியாக வெளியான நிலையில், இந்த பிரச்சனையை கையில் எடுத்த பிரேசில் நாட்டு எதிக்கட்சிகள், பிரேசில் அரசை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அதுவும், பிரேசிலில் அதிபர் ஜயார் பல்சொனாரோ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், பிரேசில் நாட்டின் நாடாளுமன்ற எதிர்க் கட்சி உறுப்பினரான எலியாஸ் வாஸ் என்பவர், அந்நாட்டின் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “பிரேசில் ராணுவத்துக்கு எந்தெந்த விஷயங்களுக்காக பணம் செலவிடப்படுகிறது?” என்று, அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அந்நாட்டின் நாடாளுமன்ற எதிர்க் கட்சி உறுப்பினரான எலியாஸ் வாஸ்க்கு பதில் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த பதில், அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கிடைக்கப் பெற்றது.
அந்த பதிலில், “பிரேசில் ராணுவ வீரர்களுக்கு வயாகரா மாத்திரைகள் மற்றும் செயற்கை ஆணுறுப்புகளை வாங்குவதற்கு லட்சக்கணக்கிலான பணத்தை அரசாங்கம் செலவிடுவதாக” குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்நாட்டின் நாடாளுமன்ற எதிர்க் கட்சி உறுப்பினரான எலியாஸ் வாஸ், இந்த விவகாரத்தை அந்நாட்டின் ஊடகங்களில் தெரிவித்தார்.
இதனால், தற்போது இந்த விஷயம் அந்நாட்டில் பெரும் பூதாகரமாகி வெடித்து உள்ளது.
“பொது மக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளுக்கு கூட பிரேசிலில் தட்டுப்பாடு நிலவும் தற்போதைய சூழலில், அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு லட்சக்கணக்கான பணம் செலவிடப்பட்டு வயாகரா மாத்திரைகளும், செயற்கை ஆணுறுப்புகளும் வாங்குவது தேவைதானா?” என்று, அந்நாட்டின் எதிர்க் கட்சிகள் போர் கொடி தூக்கி உள்ளன.
இதனையடுத்து, அந்நாட்டின் எதிர்கட்சியினர் ஒன்றிணைந்து, பிரேசில் அரசுக்கு எதிராக போராட்டத்திலும் குதித்து உள்ளன.
இந்த சூழலில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பிரேசில் ராணுவம் தற்போது மறுப்பு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக, அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் ராணுவத்தினருக்கு சிகிச்சை அளிக்கவே வயாகரா மாத்திரைகள் வாங்கப்பட்டிருக்கின்றன” என்று, குறிப்பிட்டு உள்ளது.
மேலும், “ராணுவ விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” என்றும், அந்நாட்டு ராணுவம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதே நேரத்தில், “செயற்கை ஆணுறுப்புகள் வாங்கப்பட்டது தொடர்பாக” அந்நாட்டு ராணுவம் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது, அந்நாட்டில் மீண்டும் சர்ச்சைக்குறிய விசயமாகவே வெடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.