அபுதாபியில் எண்ணெய் நிறுவனத்தின் கிடங்கு அருகே நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 3 ஆயில் டேங்கர்கள் வெடித்து தீப்பற்றியது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையம் அருகே டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த டிரோன் தாக்குதலில் அங்குள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கில் 3 எரிபொருள் டேங்குகள் தீப்பற்றி எரிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியுல் உள்ள ஏர்போர்ட்டை விரிவுபடுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக கட்டுமான பணிகள் இங்கு நடந்து வரும் நிலையில்தான், திடீரென வெடிகுண்டு நேற்றைய தினம் வெடித்திருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில், ட்ரோன் மூலம் திடீர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதுதான் தற்போது அங்கு பதற்ற நிலையையும் உருவாக்கி உள்ளது. அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. எண்ணெய் நிறுவனமான ADNOC என்ற கிடங்குக்கு பக்கத்தில் முதலில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதனால், முசாஃபா பகுதியில் 3 ஆயில் டேங்கர்கள் தீப்பற்றி வெடித்து சிதறியிருக்கின்றன. இன்னொரு வெடிகுண்டு, ஏர்போர்ட் பக்கத்தில் வந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு போலீசார் கூறுகின்றனர்.

மேலும் இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், படுகாயமடைந்தவர்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லையாம். அது குறித்து அபுதாபி போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

அதனைத்தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது. கடல்வழியாக அபுதாபி அருகே வந்து டிரோன் விமானங்களை இயக்கி தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.