தமிழக அரசுக்கு எதிராக வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு எழுத்தாளர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 43 வது புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இங்கு, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாக, கடந்த வாரம், பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்குக் கடை போட வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.
அதனால், கருத்து சுதந்தரம் நசுக்கப்படுவதாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு படைப்பாளர்கள், தமிழக அரசை விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற பபாசியின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்தின் பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு, புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்திலேயே பேரணியாகச் சென்றனர்.
பின்னர், விரைந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
“அரசுக்கு எதிராக எந்த புத்தகமும் விற்கக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை என்றும், புத்தகக் கண்காட்சிக்கு வரும் எழுத்தாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் பபாசிதான் பாதுகாப்பு தர வேண்டும்” என்றும் சக எழுத்தாளர்களும் வலியுறுத்தினர். இதனால், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.