ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த போது, கால் தவறி 8 மாத கை குழந்தையுடன் பெண் ஒருவர் கீழே தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல்கள் அதிகம் காணப்படுகின்றன.
அத்துடன், கொரோனா தொற்றும் வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் மீண்டும் முழு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்கிற அச்சத்தில், வெளி மாநில தொழிலார்கள் வேலூர் மார்க்கமாக செல்லும் ரயில் நிலையங்களில் அலை மோதி வருகின்றனர்.
இதன் காரணமாக, வட மாநிலங்களுக்கு செல்லும் தமிழக ரயில்கள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. இவற்றுடன், அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்ட நெரிசல்களும் அதிகம் காணப்படுகிறது.
இந்த சூழலில் தான், வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரு பெண், தனது 8 மாத ஆண் குழந்தையுடன், அந்த ரயில் நிலையத்தில் நடந்து சென்று உள்ளார்.
அப்போது, எதிர்பாரத விதமாக, அந்த பெண்ணின் கால் தவறி விழுந்ததில் ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் விழுந்து உள்ளார்.
அந்த நேரம் பார்த்து, எர்ணாகுளத்தில் இருந்து பிளக்ஸ்பூர் செல்லும் ரயில் காட்பாடி நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த ரயிலின் அடியில் இந்த பெண்ணும், அவரது 8 மாத கை குழந்தையும் சிக்கிக் கொண்டனர்.
இதனை நேரில் பார்த்தவர்கள், உடனடியாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், ரயில் போலீசார் துரிதமாக செயல்பட்டு முதலில் அந்த கை குழந்தையை மீட்டனர், அதன் பிறகு, அங்கே விழுந்து மயங்கிய நிலையில் கிடந்த அந்த பெண்ணையும் உயிருடன் மீட்டனர்.
ஆனால், மீட்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் இருந்தது. இதன் காரணமாக, அந்த பெண் மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.
அத்துடன், மீட்கப்பட்ட குழந்தை நலமாக உள்ளதாகவும் ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணும், அவரது குழந்தையும் வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், “எர்ணாகுளம் ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நிற்கும் போது, இந்த பெண் கால் தடுக்கி குழந்தையுடன் விழுந்ததாக” கூறியுள்ளனர்.
“ரயில் தண்டவாளம் இடையில் விழுந்ததால் குழந்தையும் தாயும் உயிருடன் இருக்கிறார்கள் என்றும், அடிபட்ட பெண் மயக்க நிலையில் உள்ளதால் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என இது வரையில் தெரியவில்லை” என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், ரயிலில் அடிப்பட்ட பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவே கூறப்படுகிறது. அச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.