தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு. வாக்குப் பதிவு என்பது தேர்தலில் மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் செயல்முறையாகும். ஆம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று ஒரு பழமொழி உண்டு. அதுவும் ஜனநாயக நாட்டில் மக்கள் தீர்ப்புதான் யார் நாடாள வேண்டும் என்பதை தீர்மானிக்கும். அந்த வகையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவர அரசியல் களத்தில் அனல் அடிக்கிறது.
ஒவ்வொரு தொகுதியைப் பற்றியும் கிடைக்கின்ற செய்திகளை வைத்து ஆராய்ந்து வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்பதை ஆராய்கிறோம். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியை பற்றி சில தகவல்கள் கிடைத்தது. நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் க.சொ.க.கண்ணன் என்பவர் போட்டியிடுகிறார். கண்ணன் என்பவர் கட்சியில் ஒன்றிய கழக செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் என்று பல பொறுப்புகளை அலங்கரித்தவர்.
ஒருபுறம் இப்படி இருக்க, திமுக வேட்பாளரை எதிர்த்து களம் காண்பவர் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கே.பாலு என்பவர். பாலு ஒரு மூத்த வழக்கறிஞர். அவரும் பாமகவில் செய்தித் தொடர்பாளராக இருப்பவர். அதுமட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத்தலைவர் பதவியை அலங்கரிப்பவர்.
இருவரும் சம பலத்தில் போட்டியிடுகின்றனர். தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிர்கட்சியினரை வசைபாடுவது மரபுதான். ஒரு சிலர் சட்டரீதியான குடைச்சல்கள் கூட கொடுக்க முனைவார்கள்.
திமுக வேட்பாளரான கண்ணன் தனது வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமான பத்திரத்தில் தன் மீது 21 வழக்குகள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பாமகவினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, திமுக வேட்பாளர் கண்ணன் மீது 21 வழக்குகள் காவல் நிலையங்களிலும் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன என்று பிரச்சாரத்தில் கடுமையாக தாக்கி வருகின்றனர்.
ஆனால், திமுக வேட்பாளர் கண்ணனோ, இது விஷமப் பிரச்சாரம், என் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் மக்களுக்காக நான் போராடியதற்காக போடப்பட்டது. என் மீது போடப்பட்ட வழக்குகள் ஒன்றும் அடிதடி வழக்குகளோ, குற்ற வழக்குகளோ அல்ல, காவிரி உரிமைப் பிரச்சனை, நீட் போராட்டம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம், என அனைத்தும் மக்களுக்காக நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக போடப்பட்ட வழக்குகள் என்று தன் பங்கிற்கு அவரும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதுதான் ஜெயங்கொண்டத்தில் நிலவிவரும் அரசியல் சூழல். ஏப்ரல் 6 தேர்தல்! மே-2 வாக்கு எண்ணிக்கை. அன்று தெரிந்துவிடும் பாலுவா, கண்ணனா என்று… ஜெயங்கொண்டத்தில் ஜெயம் கொள்ள போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
- அஜெய் வேலு