கொரோனா பரவலுக்கு யார் காரணம்? என்று இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் போர்கொடி தூக்கிய உள்ளதால், உலக சுகாதார அமைப்பு கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது.
உலகியே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் மிகப் பெரிய பாதிப்பையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
மேலும், இந்த கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியதாகக் கூறப்படும் நிலையில், அது சீனாவிலிருந்து தான் பரவியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், சீனா இதனை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று பரவிய விவகாரத்தில், உலக சுகாதார அமைப்பு சரியாகச் செயல்படவில்லை என்று கூறி, உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை, அமெரிக்கா நிறுத்தியது.
இதனைத்தொடர்ந்து, உலக நாடுகளை கடும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் போன்ற, மீண்டும் ஒரு கொடிய நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று கண்டறிய வேண்டும் என்று இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தொடந்து உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவிய விவகாரத்தில், பாகுபாடின்றி சுதந்திரமான முறையில் விசாரணை நடத்தக் கோரி ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை இணைந்து, உலக சுகாதார அமைப்பில் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டன.
இந்த தீர்மானத்திற்கு இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து, பிரேசில், கனடா உள்ளிட்ட 62 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதன்படி, இன்று கூட உள்ள உலக சுகாதார அமைப்பின் 73 வது கூட்டத்தில், கொரோனா வைரஸ் தொடர்பாகச் சுதந்திரமான விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிகிறது.
அத்துடன், இந்த தீர்மானம் எதிர்ப்புகளின்றி விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், சர்வதேச விசாரணையைச் சீனா அனுமதிக்குமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதன் மூலம், சீனா மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் என்றே கூறப்படுகிறது.