கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், முகக்கவசம் அணிவதால் ஏற்படும் சில பிரச்சனைகள் குறித்தும் தற்போது பார்க்கலாம்.

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தப்படும் என்று கடந்த சில வாரங்களாகவே செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.

அத்துடன், அடுத்து வரும் சில நாட்களில் சென்னை மட்டுமின்றி தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில், அனைவரும் மாஸ்க் போடுவது அவசியம் என்று, அரசு வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், அதனையும் மீறி மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்வோர் மீது போலீசார் தொடர்ச்சியாக அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, வீட்டில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் போது மறந்துவிடக் கூடாத ஒரு முக்கிய பொருளாக மாறி உள்ள முகக்கவசம்.

இப்படியான நிலையில், தொடர்ச்சியாக முகக்கவசம் அணிவதால் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும் பொது மக்கள் சிலர் கருத்துக்கூற தொடங்கி உள்ளனர்.

அதன்படி, “கொரோனாவை தடுக்கும் முக்கிய அம்சமாக முகக்கவசம் பார்க்கப்பட்டாலும், அதனை தொடர்ச்சியாக அணிவதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது” என்றே கூறப்படுகிறது.

இதனால், கடந்த ஆண்டு போல் அல்லாமல் இந்த ஆண்டு முகக்கவசம் அணிவதில் பொது மக்கள் பலரும் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

“இப்படியாக பல மணி நேரம் தொடர்ச்சியாக முகக்கவசங்களை அணிவதால், மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், காதுகள் அருகே சிராய்ப்புகள் உருவாகிறது என்றும் சிலர் கூறத் தொடங்கி உள்ளனர். இதில், வயதானவர்களுக்கு தான் மூச்சு விடுவதில் அதிகம் சிரமம் இருக்கிறது” என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், “வெயில் காலங்களில் முகக்கவசங்கள் தொடர்ச்சியாக அணிவதால், அதிக அளவில் வியர்வை வெளியேறுகிறது என்றும், தூய காற்றை சுவாசிக்க முடியவில்லை போன்ற பிரச்சனைகள் இருப்பதாகவும்” பொது மக்கள் சிலர் கருத்துக்கூற தொடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக, “முகக்கவசம் அணிவதைத் தவிர, வேறெந்த தடுப்பு நடவடிக்கைகள் இருந்தாலும், அவற்றை நாங்கள் கடைப்பிடிப்பதில் எந்த சிரமமும் இல்லை என்றும்” அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

அதே நேரத்தில், “பொது இடங்களுக்கு செல்லும் போது 3 அடுக்கு கொண்ட துணியால் ஆன முகக்கவசத்தை பொது மக்கள் அணிய வேண்டும்” என்று, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதன்படியே, “பெரும்பாலான மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் பெரும்பாலும் 95 ரக முகக்கவசத்தையும், மருத்துவமனைகளின் பிற பணியாளர்கள் சர்ஜிக்கல் முகக்கவசத்தையுமே அதிகம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.