கொரோனா போராளிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி சொல்ல விரும்புவதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
கொரோனா என்னும் கொடிய நோய்க்கு எதிராக இந்தியா உட்பட உலகமே போராடி வருகிறது. இந்த போராட்டத்தில், மக்கள் அனைவரும் வீதிகளில் நடமாடாமல், வீடுகளிலேயே இருக்கும்படி, மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்தி, தொடர்ந்து நாடு முழுவதும் பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் நாட்டு மக்களுக்கும், நோய் தொற்று பாதிப்பப்பட்டு, கொரோனாவிடமிருந்து போராடி வரும் நோயாளிகளுக்கும், கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி செல்லும் விதமாக, முப்படைகளின் தளபதிகளும் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா, கடற்படை தளபதி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத், “ஆயுதப்படைகள் சார்பில், கொரோனா போராளிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி சொல்ல விரும்புவதாக” குறிப்பிட்டார்.
“கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் விதமாக, மே 3 ஆம் தேதி காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை இந்திய விமானப்படை விமானங்கள் பறக்கும்” என்று கூறினார்.
மேலும், “ஹெலிகாப்டர்கள் மூலமாக மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும் என்றும், கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
“பெரும்பாலான மாவட்ட மருத்துவமனைகள் முன்பு ராணுவம் சார்பில் அணிவகுப்பு பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி நடத்தப்படும்” என்றும் பிபின் ராவத் கூறினார்.
“இது கொரோனாவுக்க எதிராகத் தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு நாடு செய்யும் மரியாதை” என்றும், தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.