“தமிழ்நாட்டில் மொழி உரிமை காக்க தொடர்ந்து பாடுபடுவோம்” என்று, திமுக தொண்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து உள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தப் பிறகு, அடுத்த பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா முழுவதும் இந்தியைத் திணிக்க தேசிய கட்சிகள் முற்பட்டபோது, “தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்கக் கோரி” தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இந்தி மொழி பின் வாங்கிக்கொண்டது. இதனால், தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்கக் கோரிய போராட்டங்கள் அமைதியாகிப் போனது.

தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு, பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் மெல்ல திணிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள அரச பணிகளுக்கு வேற மொழி பேசுபவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இதில், அதிகம் வட மாநிலத்தவர்களே தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் பணி அமர்த்தப்பட்டதாகத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல தமிழ் அமைப்புகள் அடிக்கடி போராட்டத்தில் குதிப்பது, தற்போது தமிழ்நாட்டில் வாடிக்கையாக நடக்கும் ஒரு விசயமாக சூழல் மாறியிருக்கிறது.

இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு “இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல” என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

இது தமிழகம் உட்பட தென் இந்திய மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பெரிய அளவில் சர்ச்சைக்கும் வித்திட்டது.

இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் பல விதமாக கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

அந்த வகையில், “மாநில உரிமை மற்றும் மொழி உரிமை காக்க தொடர்ந்து பாடுபடுவோம்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது சூளுரைத்து உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், “மாநில உரிமை, மொழி உரிமை காக்க கண்ணும் கருத்துமாக திமுகவினர் தொடர்ந்து பாடுபடுவோம்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம், அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சுட்டிக்காட்டி உள்ளார்.

“இந்திய ஒன்றியத்தில் எவராலும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம்” என்றும், அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, “தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகிய மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு திமுக பயணிக்கிறது” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.