விருதுநகர் அருகே மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூரைச் சேர்ந்த திருமூர்த்தியின் 3 வயது மகன் ருத்ரன், இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்குச் சென்று விளையாடிக்கொண்டிருந்தான்.
வீட்டின் வாசலில் நீண்ட நேரமாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென்று காணாமல் போனான். இதனையடுத்து, ருத்ரனின் பெற்றோர், அந்த பகுதியில் எல்லா இடங்களிலும் தேடி உள்ளனர்.
இதனிடையே, வீட்டின் அருகே உள்ள 4 அடி ஆழம் கொண்ட மழை நீர் சேகரிப்புத் தொட்டியானது, நேற்று முதல் பெய்த கனமழை காரணமாக, முழுவதுமாக நிறைந்து வழிந்துள்ளது.
இந்நிலையில், தொட்டியைப் பார்த்ததும் சந்தேகமடைந்த குழந்தையின் பெற்றோர், தொட்டிக்குள் இறங்கித் தேடியுள்ளனர். அப்போது, சிறுவன் ருத்ரன் தவறி விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், சிறுவனை மீட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், சிறுவன் மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த ஈரம் காய்வதற்குள், அதேபோல் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன், மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.