பணத்திற்கு ஆசைப்பட்ட பெற்றோர், 7-ம் வகுப்பு மாணவிக்கு 30 வயது பணக்கார மாப்பிள்ளையுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள். அந்த 2 பெண் குழந்தைகளும், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
மூத்த பெண் 15 வயது சிறுமி, 9 ஆம் வகுப்பும், 12 வயதுடைய இளைய மகள் 7 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களது உறவினர் 30 வயதான கோபிநாத், ஆந்திராவில் நன்றாக வசதி வாய்ப்போடு இருக்கிறார். அவர், இந்த ஏழை தம்பதியின் மூத்த மகளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்.
பணத்திற்கு ஆசைப்பட்ட அந்த கூலித்தொழி தம்பதியினர், தங்களது மகளை அவருக்குத் திருமணம் செய்து வைக்கச் சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இருவருடைய ஜாதகத்தையும் அவர்கள் பார்த்தபோது, பெண்ணின் ஜாதகம் ஒத்துப்போகவில்லை. இதனால், 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியின் ஜாதகத்தைப் பார்த்துள்ளனர். அந்த ஜாதகம், அந்த பணக்கார மாப்பிள்ளை ஜாதகத்துடன் ஒற்றுப்போனது. ஆனால், சிறுமிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.
“அந்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வோம்” என்று பெற்றோர்கள் மிரட்டி உள்ளனர். இதனையடுத்து, சிறுமியைக் கட்டாயப்படுத்திக் கடந்த 6 ஆம் தேதி சித்தூர் அருகே உள்ள ஒரு கோயிலில் அந்த பணக்கார மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
இதனிடையே, 3 நாட்கள் மாப்பிள்ளையுடன் வாழ்ந்த சிறுமி, அதன் பிறகு காட்பாடிக்கு விருந்துக்காக வந்துள்ளார். அப்போது, தன்னுடைய கல்விச் சான்றிதழை வாங்கி வருவதாகக் கூறிவிட்டு, பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு, தன் வகுப்பு ஆசிரியர் மற்றும் தோழிகளிடம் தனக்கு நேர்ந்த குழந்தைத் திருமணத்தைப் பற்றி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த வகுப்பு ஆசிரியர், சமூக நலத்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, அங்கிருந்து மீட்கப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அங்குள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டார்.
மேலும், சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்தது தொடர்பாக, மாப்பிள்ளை உட்பட இரு வீட்டாரையும் சேர்ந்து 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, பெற்றோரின் பேராசையால், பணக்கார மாப்பிள்ளைக்கு 7 ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்து வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.