11 வயது மகளை முரட்டு இளைஞரோடு திருமணம் செய்து வைக்க நினைத்த தந்தையை, எதிர்த்துப் போராடி சிறுமி அதில் வெற்றியும் பெற்றார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிகப்பூரை சேர்ந்த சுரபன் நிஷா, அப்பகுதியில் தினக்கூலி தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு 11 வயது மகள் ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த சுரபன் நிஷா, தனது 11 வயது மகளுக்கு திடீரென்று திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த 28 வயதான முரட்டு இளைஞர் ஒருவரை, அவர் மாப்பிள்ளையாகத் தேர்வு செய்தார்.
இதற்கு அந்த சிறுமி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சிறுமியின் தந்தை, வரும் 10 ஆம் தேதியன்று திருமணத்தை நடத்த ரகசியமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.
தந்தையின் செயலால் சிறிது யோசித்த அந்த சிறுமி, சற்றும் தாமதிக்காமல் 112 என்ற சிறார் உதவி மையத்திற்கு போன் செய்து, தனக்கு நடைபெற உள்ள திருமண ஏற்பாடுகள் குறித்து புகார் அளித்துள்ளார். மேலும், தான் படிக்க விரும்புவதாகவும் அந்த அதிகாரிகளிடம் அந்த சிறுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமி மற்றும் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்ற குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், சிறுமிக்கு நடக்க இருந்த திருமண ஏற்பாடுகளைத் தடுத்து நிறுத்தினர். மேலும், இருவீட்டாரையும் கடுமையாக எச்சரித்தனர். இதனையடுத்து, சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தற்போது நிறுத்தப்பட்டது.
மேலும், சிறுமியின் தந்தை மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் இருப்பதால், அவரை கண்காணிக்கவும், சிறுமிக்குப் பாதுகாப்பு கொடுக்கவும் போலீசார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால், சிறுமி எப்போதும் போல், தற்போது பள்ளிக்குச் சென்று வருகிறார். இதனிடையே, தனக்கு நடைபெற இருந்த சிறு வயது திருமணத்தை, துணிச்சலோடு எதிர்த்துப் போராடி அதில் வெற்றி பெற்ற சிறுமிக்கு, தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.