2022 ஆம் ஆண்டின் புதிய நிதியாண்டின் முதல் நாள் இன்று தொடங்கி உள்ள நிலையில், இன்று முதல் பல்வேறு அடிப்படை விசயங்களுக்கும் புதிய வரிகளும் விதிக்கப்பட்டு உள்ளதால், இன்று முதல் பல்வேறு பொருட்களின் விலைகளும் அதிரடியாக உயர்ந்து உள்ளது.

அதாவது, மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளும், ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்து உள்ளன.

அதன் படி, 2022 ஆம் ஆண்டு புதிய நிதியாண்டு இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில், சமையல் எரிவாயு முதல் கார் வரை பல்வேறு அடிப்படை பொருட்களின் விலையும் இன்று முதல் உயர்ந்து அமலுக்கு வந்து உள்ளது.

அதே போல், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையானது, உத்திரப் பிரதேச உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்குப் பிறகு, கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்தச் சூழலில் தான், இப்படியான இந்த விலையேற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லி விஜய் சவுக் பகுதியில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மத்திய அரசை கண்டிக்கும் வகையில் நடைபெறும் அந்த போராட்டத்தில், “பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர்கள் வலியுறுத்தினார்கள்.

எனினும், இன்று முதல் அனைத்தும் விலை உயர்ந்து உள்ளது.

அந்த வகையில், இன்று முதல் “தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்து உள்ளது.

குறிப்பாக, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை 268.50 ரூபாய் உயர்ந்து 2406 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல், 14.2 கிலோ எடை உள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 965.50 ரூபாயாக விலை தொடர்கிறது. அதாவது, ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டதால் இந்த முறை மாற்றம் செய்யப்படவில்லை.

குறிப்பாக, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 27 சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையில் இன்று முதல் அதிரடியாக உயர்ந்து உள்ளன.

அதன் படி,

- கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு 10 ரூபாய் விரை விலை உயர்ந்து உள்ளது.

- பஸ், டிரக்குகளுக்கு 15 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

- 4 முதல் 6 டயர் கொண்ட வர்த்தக வாகனத்துக்கு 25 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

- கனரக வாகனத்துக்கு 30 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்கள் யாவும் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்து உள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 10.7 சதவீதம் அளவுக்கு விலைகள் உயர்த்தப்படும்” என்று, ஏற்கனவே இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று முதல் நாடு முழுவதும் “அத்தியாவசிய மருந்து பொருட்களான வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800 க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை இன்று முதல் உயர்ந்து புதிய விலையுடன் அமலுக்கு வந்து உள்ளது.

முக்கியமாக, “அத்தியாவசிய மருந்து பட்டியலில் இடம் பெற்று உள்ள பாராசிட்டமால், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள், ஸ்டீராய்டுகள் உள்ளிட்டவற்றின் விலை” உயர்த்தப்பட்டு உள்ளன.

அதே போல், “காய்ச்சல், புற்று நோய், நீரழிவு எதிர்ப்பு நோய், ரத்த அழுத்தம், தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மருந்துகளின் விலையும் இன்று முதல் 10.7 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்து” உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றுடன், வீடு கட்டும் பொது மக்கள் அல்லது வீடு வாங்குவோருக்கு இது வரை வழங்கப்பட்டு வந்த வரி சலுகைகளை மத்திய அரசு தற்போது நிறுத்த உள்ளது.

அதாவது, மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் மீது இன்று முதல் 30 சதவிகித வரி விதிப்பு அமலுக்கு வந்து உள்ளது. இதன் காரணமாக, விடிஏ எனப்படும் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் அல்லது கிரிப்டோ கரன்சிகளை வாங்குவதிலும் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, சுங்கச்சாவடிகளில் கட்டணத்தின் விலை உயர்வால், தமிழகம் முழுவதும் லாரி, கார் வாடகை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இவற்றை அடிப்படையாக கொண்டு, அதன் தொடர் பொது மக்களின் அன்றாட அடிப்படை பொருட்களின் விலைகளும் அடுத்தடுத்த நாட்களில் விலை உயரும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.