இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என ஆபர் அறிவித்தது ஆம்பூர் பிரியாணி கடை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்தது. மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.
மேலும் கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள. மழையால் விளைநிலங்களில் பயிர்கள் மழையில் மூழ்கி பெரும் சேதம் ஆகின இதனால் தமிழகம் , ஆந்திரா மற்றும் கேரளாவில் பெய்த தொடர் மழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலைகள் கடந்த சில நாட்களாக கடும் விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.100 மற்றும் அதற்கு மேல் விற்கப்படுவதால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சந்தைகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து அதிகபட்சமாக ரூ.150க்கு விற்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் ஆம்பூர் பிரியாணி இயங்கி வருகிறது. இக்கடையில் இன்று அதிரடி ஆபர் ஒன்று அறிவித்து விற்பனை செய்தது. அதாவது முழு பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம் என்றும், அதேபோல் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்றும் சலுகையை அறிவித்து விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இயற்கை சீற்றத்தால் அழிந்து வரும் விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆபர் வழங்கப்படுவதாக கடை உரிமையாளர் கூறுகிறார். ஆனால் இப்போது தக்காளி விலை, பெட்ரோல், டீசல் விலையைவிட நாளுக்கு நாள் விலை உயர்கிறது. இதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனையும் சுட்டிக்காட்டி தக்காளிக்கு பிரியாணி வழங்கியதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து தக்காளி விலை உயர்வை குறைக்க வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் வீட்டு மாடியில் தோட்ட பயிர் செய்வதன் மூலம் இந்த விலை உயர்வை குறைக்க முடியும் என கடை உரிமையாளர் யோசனையை தெரிவித்தார்.