தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்த தளர்வுகளும் இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முதலில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டது.

மேலும், அத்தியாவசிய தேவைகளான மருந்து, உணவு, பால், மளிகை உள்ளிட்ட அடிப்படை பொருட்களை மட்டும் விற்பனை செய்ய, குறிப்பிட்ட நேரத்திற்குக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், பிற கடைகள், நிறுவனங்கள் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் அதிரடியாக மூடப்பட்டன.

ஆனால், கொரோனாவின் தாக்கம் குறையாமல், வீரியத்துடன் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து பரவி வந்தது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு முடிந்த நிலையில், 2வது முறையாக மே 3 ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, 20 ஆம் தேதி (இன்று) முதல், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட சில விசயங்களுக்கு மட்டும் தளர்வு இருக்கும் என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது.

ஆனால், கடந்த ஒரு வாரக் காலத்திற்குள், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால், தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக இருந்த தளர்வுகள், வல்லுநர் குழு ஆலோசனைக்கு பின் முறைப்படி அறிவிக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு கூறியிருந்தது.

அதன்படி, கடந்த வாரம் தமிழக அரசு நியமித்த 12 வல்லுநர் குழுவினர், கடந்த சில நாட்களாக நடத்திய ஆய்வை, அறிக்கையாக இன்று முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினர். அத்துடன், இந்த அறிக்கையின் அடிப்படையில், வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனையும் நடத்தினர்.

வல்லுநர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு, தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை, ஊரடங்கு தளர்த்தப்படாது என்றும், இப்போது உள்ள நடைமுறையே மே 3 ஆம் தேதி வரை தொடரும்” என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், “அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்குத் தமிழக அரசு ஏற்கனவே அளித்த விலக்குகள் மீண்டும் தொடரும் என்றும், நோய்த்தொற்று குறைந்தால், வல்லுநர் குழு ஆலோசனைப்படி நிலைமைக்குத் தகுந்தால் போல் முடிவு எடுக்கப்படும்” என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும், அது தொடர்பான அறிவிப்பு மே 3 ஆம் தேதிக்குப் பிறகு முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.