“தமிழகத்தில் தற்போது உள்ள திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த தேர்தல் வெற்றியைப் பார்ப்பதாக” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
இவற்றுடன், அதிமுக கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்திலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திமுக இந்த முறை அமோகமாக வெற்றி பெற்று உள்ளது.
இந்த சூழலில் தான், திமுகவின் இந்த மாபெரும் வெற்றி குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த 9 மாத கால ஆட்சிக்கு பொது மக்கள் வழங்கிய நற்சான்றிதழ் தான், இந்த வெற்றி” என்று, குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் தான் இது” என்றும், பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
“இந்த வெற்றியை கண்டு நாங்கள் கர்வம் கொள்ளவில்லை என்றும், மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம்” என்றும், கூறினார்.
அத்துடன், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி” என்றும், முதலமைச்சர் தெரிவித்தார்.
“தேர்தலுக்கு முன்பாக, 100 சதவீத வெற்றியை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களை நான் கேட்டுக்கொண்டதை ஏற்று, எனது கோரிக்கையை ஏற்று, மக்கள் முழுமையான வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு அளித்திருப்பதாகவும்” முதலமைச்சர் கூறினார்.
மேலும், “திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி செய்யும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், மக்களின் நம்பிக்கையை மனதில் கொண்டு திமுக சிறப்பான ஆட்சியை அளிக்கும்” என்றும், உறுதிபடத் தெரிவித்தார்.
குறிப்பாக, “தமிழகத்தில் தற்போது உள்ள திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக, இந்த தேர்தல் வெற்றியைப் பார்ப்பதாகவும்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்தோடு சுட்டிக்காட்டினார்.
“நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்று உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று வாழ்த்திய முதல்வர், “அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தையே திமுக கைப்பற்றி உள்ளது” என்றும், மேற்கொள் காட்டினார்.
முக்கியமாக, “எந்தப் புகாரும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், யாராக இருந்தாலும் எந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், முதல்வர் உறுதிப்படத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முதல்வர், “ஒன்பது மாத கால ‘#DravidianModel’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ் தான் இந்த #UrbanLocalBodyElection முடிவுகள்!” என்றும், “இந்த வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன். மக்கள் என் மீது வெளிப்படுத்தி உள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற உழைப்பேன்” என்றும், முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.