குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 10 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில், முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்தவர்களில், 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரியவந்தது.
குறிப்பிட்ட இந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாகபோலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்திய நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 முறைகேடு புகாரில் சிக்கிய 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் தேர்வு எழுத வாழ்நாள் தடை நேற்று விதிக்கப்பட்டது.
அத்துடன், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக, 3 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேர் மீதும், 14 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், கைதான 3 பேரும், பிப்ரவரி 7 ஆம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றக் காவலில் இருக்கும் 3 பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, கடலூரில் மேலும் ஒரு இடைத்தரகரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
அத்துடன், குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 10 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், இந்த முறைகேட்டில் ராமேஸ்வரம், கீழ்க்கரை தேர்வு மையங்களில் பொறுப்பிலிருந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதேபோல், குரூப்-4 தேர்வில் கீழ்க்கரை, ராமேஸ்வரம் மையங்கள் தவிர வேறு எங்கும் முறைகேடு நடைபெறவில்லை என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.