தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களாக, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி, தமிழக அரசின் உத்தரவின்படி, உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை தொடங்கியது. அப்போதே அவர்களுக்கு பாடப்புத்தகம், புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
அரசுப்பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை சரிந்து வந்த நிலையில், நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டுவதால், கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு 20 சதவீதம் சேர்க்கை அதிகரிக்கும் என, நிபுணர்கள் கணித்தணர்.
இதுகுறித்து பேசிய அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர், ``பொதுவாக அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான், மேல் வகுப்புகளுக்கு அரசுப் பள்ளிக்கு வருவது வழக்கம். ஆனால், நடப்பு கல்வியாண்டில், தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியில் படித்து வருபவர்கள், அரசுப் பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். நேற்று பள்ளிகளில் சேர வந்தவர்களில், பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் படிக்க வைத்த பெற்றோர்தான். பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலையில், தொழில் மற்றும் பொருளாதார நிலைமை மோசமடைந்த பெற்றோர், தனியார் பள்ளியில் கட்டணங்களை செலுத்த முடியாமல், அரசுப் பள்ளிகளுக்கு வருகின்றனர்.
ஆனாலும், பெரும்பாலானோருக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்காமல், தனியார் பள்ளிகள் இழுத்தடித்து வருகின்றன. தனியார் பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் பெறாமலேயே வருகின்றனர். தடையில்லாமல் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பட்சத்தில், மேலும் கூடுதலாக மாணவர்கள், அரசுப்பள்ளிகளில் சேர வாய்ப்புள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வந்ததால், அவதிக்குள்ளான ஆசிரியர்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு. அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நிலையில், பெற்றோரிடம் தனியார் பள்ளிகள் மோகம் குறைய வாய்ப்புள்ளது" என்று கூறியிருக்கிறார்கள்.
மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலேயே பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுடன் பள்ளிகளுக்கு படையெடுத்தனர். கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை பின்பற்றி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் இரண்டரை லட்சம் மாணவர்கள் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இனி வரக்கூடிய நாட்களிலும் மாணவர்களின் சேர்க்கை இதே அளவில் இருக்க வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர். இதுதவிர தனியார் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. 1ஆம் வகுப்பு முதல் பத்தாம் வரை மாணவர் சேர்க்கையை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை முதல் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது. பெற்றோரும், அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என சொல்லப்படுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. வரும் 24ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கை ஆரம்பாகும்.