கடந்த மாதம் 18 -ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள மணக்கரை பகுதியில் குற்றவாளியை பிடிக்க சென்ற போலீஸார் மீது ரவுடி நாட்டு வெடிகுண்டை வீசியதில் கிராமத்தை சேர்ந்த முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார்.
இவர் உயிரிழந்திருந்த நேரத்தில், அவரின் குடும்பத்தினரை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்.
அப்போது ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளை கிராமத்தில் உள்ள காவலர் சுப்பிரமணியன் இல்லத்துக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவுடன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், போ.சின்னப்பன் ஆகியோர் இன்று நேரில் சென்று சுப்பிரமணியனின் துணைவியர் புவனேஸ்வரி மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினர்.
அப்போது அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் உதவித் தொகையை சுப்பிரமணியனின் துணைவி புவனேஸ்வரி மற்றும் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ``முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் 2017-ம் ஆண்டு காவல் பணியில் சோர்ந்து துடிப்புடன் பணியாற்றி, பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயலாற்றி காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு பாராட்டுகளை பெற்றவர்.
அவரது இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழப்பாகும்.
முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் மரணமடைந்ததை அறிந்தவுடன் தமிழக முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், காவலர் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்" என அறிவித்தார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, மாவட்ட ஆறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், மாவட்ட பனைவெல்ல சங்க தலைவர் தாமோதரன், ஏரல் வட்டாட்சியர் அற்புதமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
அரசுக்கு மட்டுமன்றி, உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு, காவல்துறை சார்பாக நிதியுதவி வழங்க, மதுரை தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்மூலம் திரட்டப்பட்ட 86,50,000 ரூபாய் தொகையை, தென் மண்டல ஐ.ஜி. எஸ்.முருகன், காவலர் சுப்பிரமணியன் வீட்டிற்கே நேரில் சென்று வழங்கினார். அவருடன் திருநெல்வேலி டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினபு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.