தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுவது குறித்தும், தமிழகம் முழுவதும் பேருந்து சேவை தொடங்கப்படுவது குறித்தும், மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொற்று படிப்படியாகச் சற்று குறைந்து வரும் நிலையில், கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், ஏற்கனவே உள்ள ஊரடங்கை மேலும் ஒரு சில தளர்வுகளோடு வரும் 28 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன் படி, தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்கள் கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில், 3 வகையாகப் பிரிக்கப்பட்டுத் தளர்வுகளைத் தமிழக அரசு தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளது.

இதில், முதல் வகையில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன.

இந்த முதல் வகையில், இடம் பெற்றுள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டு நடைமுறையில் உள்ளன.

2 வது வகையில் தர்மபுரி, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த 2 வகையில் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாகச் செயல்பாடுகளுக்கும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், 3 ஆம் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மட்டுமே இதில் இடம் பெற்று உள்ளன.

இந்த 3 வகையில், குறிப்பிட்ட இந்த 4 மாவட்டங்களுக்கும் கிட்டதட்ட முழுமையான தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.

அதன் படி, இந்த 4 மாவட்டங்களுக்கும் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில், இதுவரை தமிழகத்தில் 5 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்து உள்ளது. இதனால், கொரோனா தொற்று பரவல் நன்றாகக் குறைந்து வருகிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு 28 ஆம் தேதி முடிகிறது.

இந்த நிலையில் தான், “6 வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும்” இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகள் இந்த கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டமானது, இன்று காலை 11 மணிக்கு மேல் தொடங்குகிறது.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில், கடந்த முறை மாவட்டங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுத் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், இதில் “2 வகையில் உள்ள 23 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கலாமா?” என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளன.

முக்கியமாகக் கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கூடுதல் தகவல்கள் அளிப்பது பற்றியும் இன்றைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகின்றன. இவற்றுடன், பிற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் சிறிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதனிடையே, “தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்குச் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை” சென்னை, ந‌ந்த‌னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.